கட்டாருடன் அண்டை நாடுகள் முரண்பட காரணங்கள் இவைதான்..! BBC ஆய்வு

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள், கத்தாருடன் ராஜீய உறவுகளை முறித்துக் கொள்வது என்று முடிவெடுத்த பின்னர், அந்த நாடுகளுடன் கத்தாருக்கு ஏற்பட்ட பதற்றங்கள் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளன.

கத்தார் அரசு மீது அழுத்தம் தரும் நோக்கிலான ஒரு நடவடிக்கையில், கத்தாரின் வளைகுடா பகுதி அண்டை நாடுகள் , அதனுடன் தத்தம் நாடுகளின் எல்லைகளையும் மூடிவிட்டன.

எகிப்து ஒரு படி மேலே சென்று தனது வான்பரப்பையும் துறைமுகங்களையும் கத்தார் போக்குவரத்துக்கு மூடிவிட்டது.

சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசும், லிபியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து இயங்கும் அரசும் கத்தாருடன் தங்கள் உறவுகளைத் துண்டித்து விட்டன.

இந்த ராஜீய நெருக்கடிக்கான காரணங்கள் என்ன ? பிபிசி அரபுப் பிரிவின் அமிர் ரவாஷ் விளக்குகிறார்.

முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு

சில நாடுகளில் அரசியல் லாபங்களைப் பெற்ற இஸ்லாமியவாதிகளுக்கு ஆதரவான நாடாக கத்தார் கருதப்பட்டது.

உதாரணமாக, முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் தலைவரான, எகிப்தின் முன்னாள் அதிபர் மொஹமது மோர்சி 2013-ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், தற்போது எகிப்து அரசால் தடை செய்யப்பட்டுள்ள அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு கத்தார் மேடை போட்டுக் கொடுத்தது. சௌதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை ஒரு “பயங்கரவாத அமைப்பு” என்று வர்ணிக்கின்றன.

அதிகாரபூர்வ சௌதி செய்தி நிறுவனத்தின் மூலம் பிரசுரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்தப் பிராந்தியத்தை நிலைகுலையச் செய்யும் நோக்கிலான பல பயங்கரவாத மற்றும் மதக்குழு அமைப்புகளை கத்தார் “தத்தெடுத்துக் கொண்டுள்ளதாக” குற்றம் சாட்டப்பட்டது.

முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு, ஐ.எஸ் மற்றும் அல் கயீதா போன்ற அமைப்புகள் இதில் அடங்கும்.

ஆனால், இந்நாடுகள் எடுத்த நடவடிக்கை `நியாயமற்றவை, மேலும் அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை“ என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியது.

கத்தார் , வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் அமைப்புப் பிரகடனப்படி செயல்பட உறுதிப்பாடுகொண்டுள்ளதாகவும், “பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் தனது கடமைகளை செய்து வருவதாகவும்” அவ்வறிக்கை வலியுறுத்தியது.

அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட எதிர்ப்புகளுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின்போது , கத்தாரும், வளைகுடா கூட்டுறவு கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த அதன் அண்டைநாடுகளும் , எதிரெதிர் தரப்புகளை ஆதரித்தன.

சில நாடுகளில் அரசியல் லாபங்களைப் பெற்ற இஸ்லாமியவாதிகளுக்கு ஆதரவான நாடாக கத்தார் கருதப்பட்டது.

இரான் பற்றிய அணுகுமுறை

இரான் பற்றி அமெரிக்கா கொண்டிருக்கும் “குரோதத்தன்மை” யை விமர்சித்து கத்தார் நாட்டின் அரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டி வந்த ஒரு சர்ச்சைக்குள்ளான செய்தியால் இந்த தற்போதைய நெருக்கடி தூண்டப்பட்டது.

கணினி வலையமைப்பில் ஊடுருவியவர்கள்தான் தனது அரச செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குப் பின் இருக்கிறார்கள் என்று கத்தார் கூறியது.

இரானின் பிராந்திய ஆசைகள் குறித்து , அதன் முக்கிய போட்டி நாடான சௌதி அரேபியாவுக்கு நீண்ட காலமாகவே கவலைகள் உள்ளன.

சௌதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரதானமாக ஷியா பகுதியான காத்திஃப் மாகாணத்தில் இரான் ஆதரவுபெற்ற பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக சௌதி அறிக்கை குற்றஞ்சாட்டியது.

யேமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் கத்தார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

யேமெனில் சௌதி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற கத்தார், தான் மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிப்பதாகவும், அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றும் கூறியது.

லிபிய மோதல்

லிபியாவின் முன்னாள் தலைவர் முகமது கடாபி 2011ல் பதவிலிருந்து அகற்றப்பட்டு கொல்லப்பட்டதிலிருந்தே அங்கு பெருங்குழப்பம் நிலவிவருகிறது. எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் ஆதரவைப் பெற்ற, லிபியாவின் ராணுவத் தலைவரான கலிஃபா ஹப்தார் கத்தார் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு தந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

லிபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டொப்ருக் நகரில் இருந்து இயங்கிவரும் அரசுடன் ஹப்தார் கூட்டணியில் இருக்கிறார். இதனிடையே கத்தாரோ திரிபோலியில் இருந்து இயங்கும் மற்றொரு போட்டி அரசுக்கு ஆதரவு அளிக்கிறது.

ஊடக வெளியிலும் சண்டைகள்

கத்தார் ஊடகங்களை பயன்படுத்தி தேசத் துரோகத்தைத் தூண்டுவதாக திங்கட்கிழமையன்று சௌதி அரேபியா வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியது.

கத்தாரி ஊடகங்கள் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களுக்கு மேடை போட்டுக் கொடுத்த்தாக அந்த அறிக்கை கூறியது.

ஆனால் “முழுப் பொய்களாகக் கருதப்படவேண்டிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு தூண்டப்பட்ட பிரசாரத்தை” பற்றி கத்தார் புகார் கூறுகிறது.

இந்த ஊடக பிரசாரம் வளைகுடா நாடுகளில் குறிப்பாகவும், இப்பிராந்தியத்தில் பொதுவாகவும், பொதுமக்கள் கருத்துணர்வை நம்பவைக்கத் தவறிவிட்டது, இதனால்தான் இந்த நெருக்கடி அதிகரிப்பது தொடர்கிறது, என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியது. @BBC

Files Pictures

_96352295_hi039879444_96352300_hi039798532 18839265_222603254918064_59574050749390941_n 18839086_222603241584732_4250373115147502829_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*