சாரணியம், விளையாட்டுத்துறைக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் முஸ்தபா; முன்னாள் முதல்வர் நிஸாம் அனுதாபம்

Musthafa

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் சாரணியம் மற்றும் விளையாட்டுத்துறைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

Nizam Kariapperஅட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபாவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“தான் பிறந்த கல்முனைப் பிரதேசத்திற்கு மாத்திரமல்லாமல் முழுக் கிழக்கு மாகாணத்தினதும் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வந்த எம்.ஐ.எம்.முஸ்தபா இப்பகுதியில் சாரணியத்தை கட்டியெழுப்புவதிலும் முன்னின்று உழைத்துள்ளார்.

கல்முனை சந்தாங்க்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தமை குறித்து மிகவும் கவலை கொண்டிருந்த அவர், நான் கல்முனை மாநகர முதல்வராக பணியாற்றிய காலத்தில் அதன் அபிவிருத்திக்காக பல்வேறு வகையான ஆலோசனைகளை வழங்கியதுடன் என்னால் மேற்கொள்ளப்பட்ட மைதான அபிவிருத்தி நடவடிக்கைகளில் எனக்கு பக்கபலமாக இருந்து ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்.

அனைவருடனும் இன்முகத்துடன் பழகும் நற்பண்புமிக்க அவர், நேர்மை, கண்ணியம் நிறைந்த ஓர் ஆசானாக திகழ்ந்தார். சுயநலன், பக்கசார்பு போன்ற வார்த்தைகள் அவரது அகராதியில் கிடையாது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்விமானாள், அரசியல்வாதிகள் என அனைவரினதும் நன்மதிப்பை அவர் பெற்றிருந்தார். அவரது மறைவு இப்பிராந்தியத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இத்தகையதொரு உத்தமரின் பிரிவு எம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்க வாழ்வை பரிசளிக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

மேலும், அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் இறைவன் அருள்கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.” என்று ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*