அமைச்சுப் பதவி வகிப்பதால் நாங்கள் அடங்கிப்போக வேண்டும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட கூடாது; சாய்ந்தமருதுவில் றிஷாட் ஆக்ரோஷம்..!

19059985_1370446276409398_2101124032999509080_n

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

நாம் அமைச்சுப்பதவி வகிப்பதால் அடங்கிப்போக வேண்டும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட கூடாது. முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கும் இனவாத நெருக்கடிகளுக்கு உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிடின் ஜெனீவா சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதுவில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் பிரதித்தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் தலைமையில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது;

முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அத்தனை பேர்களிடமும் மிகவும் நாம் உட்பட முஸ்லிம் அரசியல் சக்திகளும், சமூக இயக்கங்களும் தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும் நாசகாரிகளின் நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியை வகிப்பதால் நாங்கள் அடங்கிப்போக வேண்டும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட கூடாது. சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்புவதற்கு அமைச்சுப் பதவி தடையாக இருக்குமாயின் அதனைத் தூக்கியெறிவதற்கும் தயாராகவுள்ளேன்.

வன்முறை மீது என்றுமே நாட்டம் கொள்ளாத முஸ்லீம் சமூகத்தை பொறுமை இழக்கச் செய்து இன்னுமோர் அழிவுக்கு இந்த நாட்டை இட்டுச் செல்வதற்கு இனவாதிகள் துடியாய்த் துடிக்கின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம்களின் பலத்தையும் பொருளாதார வளத்தையும் ஒட்டுமொத்தமாக தகர்ப்பதே இனவாதிகளின் உள்நோக்கமாக இருக்கின்றது. இந்த அரசு இவர்களின் நாசகார செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் கண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 220 பேருக்கு இந்நிகழ்வில் மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

19145867_1370446319742727_2965233516207608184_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*