அரசியல் அதிகாரத்தை மையப்படுத்திய முஸ்லிம் கூட்டமைப்பு தேவைதானா?

noo

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் களத்தில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தாடல் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. பேசுகின்ற பின்னணியைப் பொறுத்து பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தியும் இக்கதையாடல் திறக்கப்பட்டிருக்கின்றது.

தேர்தல் வெற்றிகளை கருத்தில்கொண்டும், குறித்ததொரு கட்சியை மாத்திரம் தோற்கடிப்பதென்ற நோக்கத்திலும், சிலர் அரசியல் பதவிகளை அடைந்து கொள்வதற்காகவும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு பற்றி சிந்திப்பதாகவும் பேசுவதாகவும் அவதானிக்க முடிகின்றது.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் குறைவடைவதை சரி செய்யும் நோக்கத்தில் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதென்பது குறித்த தேர்தல் காலங்களில் காணப்படுகின்ற சூழ்நிலையும் தேர்தல் முறைமையையும் பொறுத்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாக அமையும். ஏதாவதொரு கட்சியை மாத்திரம் தோற்கடிப்பதற்கென்று ஒன்றிணைவதென்பதும் ஒரு தேர்தல் காலத்தின் தேவையாகவே அமையும்.

அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக கூட்டிணைவது என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, குறித்த நபர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை திடப்படுத்திக் கொள்வதற்காகவும் மற்றொன்று, சமூக அடிப்படையில் தேவையாகின்ற ஒரு அரசியல் அதிகாரத்துவ இருப்பியலை அடைந்து கொள்வதற்காகும். உதாரணமாக மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சரைப் பெறுவது, உள்ளூராட்சி மன்றங்களில் மன்றங்களின் தலைமைத்துவத்தை அடைந்துகொள்வது.

இவை ஒவ்வொன்றும் கால சூழலுக்கு ஏற்ப தோற்றுவிக்கப்பட வேண்டிய முஸ்லிம் கட்சிகளினதும், மக்களின் அதிக ஆதரவைப் பெற்ற தனிமனித அரசியல்வாதிகளினதும் கூட்டிணைவு – கூட்டமைப்பு தங்கியிருக்கின்றது. ஆனால், இந்த நடைமுறைக்கு அப்பால் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், ஏனைய கட்சிகளின் அரசியல் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற முஸ்லிம் உறுப்பினர்களினதும் ஒன்றிணைவு இன்று கட்டாய தேவைப்பாடுடையதாக இருப்பது பற்றி நாம் சிந்திக்க மறந்திருக்கின்றோம்.

நாளை வரும் தேர்தலுக்காக இப்பொழுதிருந்தே முன்ஜாக்கிரதை அடிப்படையில் கூட்டிணைவு பற்றி சிந்திக்கத் தொடங்குவது ஒரு பிழையான நடவடிக்கை என்று கூற முடியாது. ஆயினும், இன்று இருக்கின்ற சூழலுக்கு தேவைப்படுகின்ற கூட்டிணைவு பற்றி சிந்திக்காதிருக்கின்ற நமது முஸ்லிம் அரசியல் களம் முன்னகர்வுகளை அடைந்துகொள்ள முடியாதென்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இன்று முஸ்லிம் அரசியல் களம் மிக முக்கியமான இரண்டுவிதமான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றது.

(01) புதிய அரசியலமைப்பில் கொண்டுவர இருக்கின்ற மாற்றங்களுக்குள் முஸ்லிம் மக்கள் நசுக்கப்படுகின்ற அம்சங்கள் காணப்படுகின்றது.

(02) முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் அத்துமீறல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டு விடயங்கள் குறித்து சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் காலத்தை தாழ்த்திக் கொண்டிருப்பது நமது இழப்புக்களை அதிகரிக்க வழிவகுக்குமே அன்றி தணிப்பதற்கு வழியாகிவிடாது என்ற அவதானமும் நமக்கு தேவையானதாகும். இதற்கு முடிவுகட்டுவதற்காக எமது முஸ்லிம் தனிக்கட்சிகளும் ஏனைய கட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற நம்மவர்களும் ஒரு கூட்டிணைவுக்கு அவசர அவசியமாக வர வேண்டியிருப்பது பற்றி நாம் உடன் சிந்தித்தாக வேண்டியுள்ளது.

ஏன் இவ்வாறனதொரு அபிப்பிராயத்தை முன்னிறுத்த வேண்டியிருக்கின்றது என்றால் இதுவரை நாம் மூன்று விதமான அரசியல் முறைமையையும் அதனோடு இணைந்த அரசியல் மக்கள் பிரதிநிதித்துவத்தையுமே கொண்டிருக்கின்றோம். இவை நமக்கு அதிக சாதகத்தன்மைகளை விளைவிக்காதும், எம்மீது திணிக்கப்பட்டு வருகின்ற அத்துமீறல்களை கட்டுப்படுத்துகின்ற பெறுபேற்றையும் உரித்தாக்கித்தரவில்லை. அவை பின்வரும் கோணங்களாகும்.

(01) சுதந்திர இலங்கையின் அரசியலிலிருந்து நமது மக்கள் பிரதிநிதித்துவத்தை பெருந்தேசியவாதக் கட்சிகளில் நேரடி அரசியலில் ஈடுபட்டு அடைந்திருக்கின்றோம். அது நமது பிரச்சினைகளை தீர்த்த வரலாற்றை கொண்டிராத பக்கத்தைப் பார்க்கின்றோம்.

(02) பெருந்தேசிய கட்சிகளில் எமது மக்கள் பிரதிநிதித்துவம் இருந்தும் நமக்கு ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முடியாத கையறு நிலையை விமர்சனத்துக்கு உட்படுத்தி மாற்று வழியின்பால் நடக்க நமது அரசியல் முறைமையை மாற்றுவதற்கு சிந்தித்தோம். இதன் அறுவடையாக தனிக்கட்சி உருவாக்கவும் அதன் பிரதிநிதித்துவமும் நமக்குள் உருவாக்கப்பட்டது. ஆயினும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. மாறாக புதுப்புது கோணங்களில் நம்மீதான நசுக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

(03) தேர்தல் காலங்களில் போட்டியிடுகின்ற கட்சிகளிலிருந்து எங்களது சமூகத்துக்கு நன்மை செய்ய வாய்ப்பை இந்த கட்சிகள் தரவில்லை என்று கூறிக்கொண்டு ஆளும்கட்சிகளின்பால் மாறிக்கொள்கின்ற ஒரு செயற்பாட்டை கடைப்பிடிக்கின்றோம்.

இதேபோன்று, தேர்தல் காலங்களில் சில உடன்பாடுகளின் அடிப்படையில் சேர்ந்து போட்டியிட்ட அந்த கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு முடியாத சூழல்கள் காணப்படுகின்றவிடத்து உடன்பாட்டின் பிரகாரம் நாங்கள் வெளியேறிச் செல்வதற்கு உரித்துண்டு. அதுவும் எங்களது மக்களை கருத்தில்கொண்டுதான் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் அமைக்கின்ற பக்கம் தாவிச் செல்கின்ற நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த நடவடிக்கையும் முஸ்லிம் சமூகத்தை இன்னல்கள் இன்றி வாழ வைப்பதற்கும் அமைதியான சூழலுக்குள் நிரந்தரப்படுத்துவதற்கும் வழி செய்யாத ஒரு கோணத்தையே தரிசிக்கின்றோம். ஆயின் இந்த பழைய முறைமையிலிருந்து விடுபட்டு மாற்று வழிகளில் தீர்வை பெறுவதற்கு உடன்பட்டு அதனைக் கடைப்பிடித்து பரிசோதித்துப் பார்த்தல் என்பது ஒரு நஷ்டமான பக்கமல்ல.

இத்தகைய நிலைதான் முஸ்லிம் கட்சிகளினதும் வேறு கட்சிகளில் அரசியல் மக்கள் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற நமது பிரதிநிதிகளும் ஒன்றிணைந்த ஒரு கூட்டமைப்பை உருவாக்குதல் வேண்டும். அதன் அவசர தேவையாகவும் முதல் பணியாகவும் இக்கட்டுரையில் முன் சுட்டிக்காட்டிய உடனடியாக எம்மை இம்சித்துக் கொண்டிருக்கின்ற அந்த இரண்டு விடயங்களுக்கும் தீர்வை கண்டடைவது என்ற இலக்கில் இணைந்துகொள்வது பற்றி நாம் சிந்திக்க வேண்டுமென்ற முன்வைப்பு இங்கு முன்னிறுத்தப்படுகின்றது.

ஒரு அரசியல் மக்கள் பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு அந்த கட்டத்தில் தேவையாக இருக்கின்ற கூட்டிணைவுகள் பற்றி அல்லது உடன்பாட்டின் பேரில் தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றிகளை அடைந்து கொள்வதென்பது ஒரு தனி விடயமாக பார்க்கப்பட வேண்டும்.

அதேபோன்று, அரசியல் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தெரிவாகியவர்களிடம் நாம் எந்தக் கட்சியினூடாக இந்த பிரதிநிதித்துவத்தை அடைந்தோம் என்கின்ற உணர்வையும், சிந்தனையையும் விட நமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளை உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் எதிர்காலங்களில் எவ்வாறான இலக்குகளை அடைந்துகொள்வதற்கு நன்கு திட்டமிட்டு காரியமாற்ற வேண்டும் என்கின்ற எண்ணமும் அதிகமாக நமது அரசியல் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தாக வேண்டும்.,

இப்படியான எண்ணங்களும், உணர்வுகளும்தான் எமது சமூகம் எதிர்கொள்கின்ற அரசியல் தீர்வு விடயத்திலும் இன்று பெரிதும் கொந்தளிப்புக்கு உட்பட்டு காணப்படுகின்ற பௌத்த-சிங்களப் பேரினவாத ஆதிக்க கெடுபிடிகளிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை விடுவிப்பதற்கு தேவையான வழிவகைகளை ஒருமித்த குரலாக கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூக நலன் சார்ந்து நின்று தமது இயங்கியலை மேற்கொள்ள உந்துசக்தியாக அமையும்.

எனவே, முஸ்லிம்களின் கூட்டிணைவு அல்லது கூட்டமைப்பு என்பது தற்போது நம்மை எதிர்கொண்டிருக்கின்ற இருக்கமான பிடிப்புக்களிலிருந்து தளர்ச்சியை அடைய செய்வதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நெருக்குவாரங்கள் தொடர்ந்தும் எம்மை அண்டிக்கொள்ளாது பாதுகாப்பதற்கான ஓர் உறுதியான அரணை கட்டியெழுப்புவதற்கும் எமது அரசியல் மக்கள் பிரதிநிதிகள் முதலில் ஒன்றிணைந்து முன்னுதாரணமாவார்களா?

எம்.எம்.எம். நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*