முன்னாள் முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் பெருநாள் வாழ்த்து

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கலாசார சூழலில் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்கும் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று ஒரு இக்கட்டான சூழலில் பல சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றோம். எமது வணக்கஸ்தலங்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்று எமது உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. சில நாடுகளில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கு நிரந்தரமான தீர்வை எதிர்பார்த்து அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் முஸ்லிம்களையும் புனித இஸ்லாம் மார்க்கத்தையும் இறைவன் நிச்சயம் பாதுகாப்பான். முஸ்லிம் உம்மாவை இந்த உலகில் இறைவன் ஸ்திரப்படுத்துவான். அதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. எனினும் அதற்கான முயற்சிகளை பக்குவமாக முன்னெடுக்க வேண்டும். ஏனைய சமூகத்தினர் எம்மை விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்ற அளவுக்கு எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. எமது வாழ்வொழுங்கு சீர்செய்யப்பட்டு, சமூக ஒற்றுமை, இன ஐக்கியம், பரஸ்பரம் புரிந்துணர்வு என்பன கட்டியெழுப்பப்பட வேண்டும்.

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று நமது ஈமான் பலப்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவற்றை உறுதியாக கடைப்பிடித்து, வெற்றியின்பால் செல்வதற்கு திடசங்கற்பம் பூணுவோம். ஈத்முபாரக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*