ஷூரா கவுன்ஸில் அதிரடி நடவடிக்கையினால் சாய்ந்தமருது வைத்தியசாலை இணைப்பு ரத்து..!

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கீழ் இணைக்கும் முயற்சிக்கு எதிராக சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அம்முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

இவ்விரு வைத்தியசாலைகளையும் இணைக்கும் பொருட்டு கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள சாய்ந்தமருது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஆவணப் பரிமாற்றம் இன்று வியாழக்கிழமை (29) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இன்று அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இணைப்பை கைவிடுவதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கீழ் இணைத்து, அங்கு எலும்பு முறிவு சத்திர சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களினால் முன்மொழியப்பட்ட ஆலோசனையை கடந்த மே மாதம் 07 ஆம் திகதி சாய்ந்தமருது வைத்தியசாலையில் பிரதி அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு என்பன ஏற்றுக்கொண்டதன் பிரகாரம், அது தீர்மானமாக எடுக்கப்பட்டு, பிரதி அமைச்சரினால் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மே மாதம் 09 ஆம் திகதி சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் அவசரமாகக் கூடி சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கீழ் இணைப்பதானது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு பாதகமான ஒரு நடவடிக்கை என்பதால் அதனை அனுமதிக்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியதுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறும் அதுவரை மாவட்ட வைத்தியசாலையாக இயங்குவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துமாறும் பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களிடம் ஷூரா கவுன்சில் கோரிக்கை விடுத்திருந்தது.

இது குறித்து சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை, வைத்தியசாலை அபிவிருத்தி குழு என்பவற்றுக்கும் ஷூரா சபை அறிவித்திருந்தது. எனினும் அவை இணைக்கும் தீர்மானத்தை வாபஸ் பெறவுமில்லை இணைப்பதற்கான நியாயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தவுமில்லை. அதேவேளை இவர்களின் ஒத்துழைப்புடன் இணைப்பதற்கான அமைச்சு மட்ட நடவடிக்கைகளை திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இதன் ஒரு முக்கிய கட்டமாக சாய்ந்தமருது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சுக்கு விடுவிக்குமாறு கிழக்கு மாகாண சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கான நிகழ்வே மிகவும் ரகசியமாக இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதனை நோன்புப் பெருநாள் தினத்தன்று அறிந்து கொண்ட ஷூரா கவுன்ஸில் அன்றைய தினமே அவசரமாக கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டு, அவசர நடவடிக்கைகளில் இறங்கியது. அன்றைய தினமே பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபாவை சந்தித்த ஷூரா கவுன்ஸில் செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் உள்ளிட்ட பிரதிநிதிகள், இணைப்பிலுள்ள பாதகங்கள் குறித்து தெளிவுபடுத்தினர்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களை ஷூரா கவுன்ஸில் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையிலான குழுவினர் அட்டாளைச்சேனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதன்போது ஷூரா கவுன்சிலின் நிலைப்பாட்டுடன் தான் உடன்படுவதாக அவர் உறுதியளித்தார். அத்துடன் வைத்தியசாலை அபிவிருத்திக்கான ஆலோசனைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மறுநாள் புதன்கிழமை (28) ஷூரா கவுன்சில் விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி, இணைப்புக்கு எதிரான தமது நியாயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியது. அதேவேளை ஷூரா கவுன்சில் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பதனால் வைத்தியசாலையை இணைக்கும் நடவடிக்கையை தான் கைவிட்டு விட்டதாக தெரிவித்து சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் சாய்ந்தமருது வைத்தியசாலையை கிழக்கு மாகாண சபையிடமிருந்து விடுவிக்குமாறு சுகாதார அமைச்சு விடுத்திருந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் ஷூரா கவுன்சிலின் வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் அவசர கலந்துரையாடல் ஒன்று வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்விவகாரம் ஆராயப்பட்டது. இதன்போது அங்கு சமூகமளித்திருந்த ஷூரா கவுன்சில் பிரதிநிதிகள் உட்பட ஊர்ப்பிரமுகர்கள் அனைவரும் இணைப்புக்கு எதிரான கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்தனர்.

இதன்பிரகாரம் ஏலவே இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியிருந்த சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு என்பன தமது நிலைப்பாட்டை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இணைப்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

அதேவேளை இவ்விரு வைத்தியசாலைகளையும் இணைப்பதற்காக கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள சாய்ந்தமருது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஆவணப் பரிமாற்றம் தொடர்பிலான நிகழ்வு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் மாகாண சுகாதார பணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளின் பங்கேற்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (29) ஏற்பாடாகியிருந்த நிலையில் ஷூரா கவுன்சில் பிரதிநிதிகளும் இந்நிகழ்வுக்கு சமூகமளித்து இணைப்பிலுள்ள பாதகமான விடயங்களை எடுத்துக் கூறியதுடன் ஏலவே இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியிருந்த பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு என்பன தாம் அதனை வாபஸ் பெற்று விட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கீழ் இணைக்கும் நடவடிக்கையை கைவிடுவது எனவும் சாய்ந்தமருது வைத்தியசாலையை கிழக்கு மாகாண சபையிலிருந்து விடுவிப்பதில்லை எனவும் மாகாண சுகாதார திணைக்களம் முடிவு செய்தது.

அதேவேளை சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஷூரா கவுன்சிலினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டு, மாகாண அமைச்சர் நஸீர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*