ஊரின் அடையாளத்தை அழித்தொழிக்க முற்பட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம்; ஷூரா கவுன்ஸில் சூளுரை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக ஊரின் அடையாளத்தை அழித்தொழிக்கும் வகையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கீழ் இணைக்கும் நடவடிக்கை தொடருமாயின் அதற்கெதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம் என சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் சூளுரைத்துள்ளது.

வைத்தியசாலை இணைப்புக்கு எதிரான தமது நியாயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு சாய்ந்தமருது யூனியன் மண்டபத்தில் இன்று புத்தனிக்கிழமை (28) நடத்திய விசேட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே ஷூரா கவுன்சில் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஷூரா கவுன்ஸில் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இப்பத்திரிகையாளர் மாநாட்டில் அதன் செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் கருத்து தெரிவிக்கையில்;

பல ஆண்டுகளாக சாய்ந்தமருதில் இயங்கி வந்த கரவாகு தெற்கு கிராமாட்சி சபையை இழந்து விட்டு இப்போது அதற்காக போராடுவது போல் எமது வைத்தியாசாலையையும் பிறிதொரு வைத்தியசாலையுடன் இணைத்து விட்டு, அடுத்த சந்ததிக்கு துரோகமிழைக்க நாம் தயாரில்லை. அதனால் ஒருபோதும் இணைப்புக்கு நாம் இணங்கப்போவதில்லை.

நீண்ட காலமாக சாய்ந்தமருது மக்கள் தங்களை தாங்களே ஆள்வதற்கான உள்ளுராட்சி சபையைக் கோரி நிற்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அதற்காக உள்ள வளங்களில் ஒன்றாக சாய்ந்தமருது வைத்தியசாலையும் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த வைத்தியசாலையை பிறிதொரு வைத்தியசாலையுடன் இணைக்க எடுக்கப்படும் முயற்சி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த இணைப்பானது உள்ளுராட்சி சபை கனவை தகர்த்தெறியும் சூழ்ச்சியாகவே நாம் பார்க்கிறோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கும் அஞ்சி, அடிமைப்பட்டு சாய்ந்தமருதின் அடையாளங்களை அழிக்க எடுக்கும் முயற்சிக்கு ஷூரா கவுன்சில் துணைபோக மாட்டாது. எமது ஷூரா கவுன்சிலின் எதிர்ப்பு காரணமாக இந்த இணைப்பு நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக  பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களினால் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாக அறிகிறோம்.

சாய்ந்தமருது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய விரும்புபவர்கள் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைரினால் முன்மொழியப்பட்டு, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள தள வைத்தியசாலை என்ற அந்தஸ்த்தை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுப்பதனூடாக சாய்ந்தமருது மக்களுக்கு உதவ முடியும்.

இதனையே சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் நாம் வலியுறுத்துகின்றோம். அவருக்கு மூன்று முறை வாக்களித்த இவ்வூர் மக்களுக்கு இதன் மூலம் அவர் நன்றிக்கடன் செலுத்த முன்வர வேண்டும். அதை விடுத்து அபிவிருத்தி என்ற போர்வையில் சாய்ந்தமருதில் முதுகெலும்பை முறிக்க எடுக்கப்படும் சதிகளுக்கு அவர் துணை போகக்கூடாது.

எமது கருத்துக்களை மீறி- சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்தையும் தாங்கள் ஏற்கப்போவதில்லை. அதற்கு எதிராக வீதியில் இறங்கிபோராடவும் நாம் தயாராகவுள்ளோம்.

வைத்தியசாலை விடயம்போன்று சாய்ந்தமருதின் ஏனைய விடயங்களிலும் ஷுறா சபை மிகுந்த கரிசனை செலுத்தி வருகிறது. வட்டார எல்லைப் பிரிப்பில் கூட இந்த ஊரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். உரிய மட்டத்தில் அதற்குரிய நடவடிக்கையை எடுப்போம்” என்றார்.

இப்பத்திரிகையாளர் மாநாட்டில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஆதம்பாவா, சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.சலீம், சாய்ந்தமருது இணக்க சபைத் தலைவர் அல்ஹாஜ் எம்.சி.எம்.ஹனீபா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார். ஷூரா கவுன்ஸில் உப தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.ஜப்பார், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல், சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ்.தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.

இப்பத்திரிகையாளர் மாநாட்டுக்கான ஒழுங்குகளை ஷூரா கவுன்ஸில் உப செயலாளர் எம்.சி.எம்.சி.முனீர், உப பொருளாளர் எம்.ஐ.எம்.இஸ்திகார் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*