தரம்பிரிக்கப்படாத குப்பைகளை கல்முனை மாநகர சபை பொறுப்பேற்காது; ஆணையாளர் அறிவுறுத்தல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போது குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் அவ்வாறு தரம்பிரித்து ஒப்படைக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கண்டிப்பான பணிப்புரையின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் கல்முனை மாநகர சபை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சானது, திண்மைக் கழிவுகளை தரம்பிரித்து சேகரிப்பதற்கான தேசியக் கொள்கைத் தீர்மானத்தை கடந்த வருடம் மேற்கொண்டிருந்தது. இதன்படி அந்த அமைச்சு விடுத்துள்ள கண்டிப்பான பணிப்புரைக்கமைவாக நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளன.

இத்திட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நடைமுறைக்கு வந்திருப்பதனால் பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இதன்படி உக்கக்கூடிய கழிவுகளான சமையல் மற்றும் உணவுக் கழிவுகள், இலைகுழைகள், பழத்தோல்கள் மற்றும் கடதாசிகள் என்பவற்றை ஒரு பொதியிலும் உக்க முடியாத பிளாஸ்டிக் போத்தல்கள், உலோகப் பொருட்கள், பொலித்தீன் பைகள், இலத்திரனியல் கழிவுகள், காட்போட் என்பவற்றை மற்றொரு பொதியிலும் உடைந்த கண்ணாடிகளை வேறாகவும் சேகரித்து ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தரம்பிரிக்கப்படாத கழிவுகளை எமது மாநகர சபை வாகனங்கள் எச்சந்தர்ப்பத்திலும் பொறுப்பேற்க மாட்டாது என்பதுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இடமுண்டு என்பதை அறியத் தருகின்றேன்.

கழிவுகளை தரம்பிரித்து சேகரித்து, ஒப்படைப்பதற்கு வசதியாக மாநகர சபையினால் விற்கப்படும் இரு வேறு நிறங்களைக் கொண்ட பைகளை பொது மக்கள் கொள்வனவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உடைந்த கண்ணாடிகள் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் சேகரிக்கப்படும்.

இந்நடைமுறையை பொது மக்கள் மாத்திரமல்லாமல் அரச, தனியார் நிறுவனங்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்று கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*