தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு தேசிய பல்கலைக்கழக தோற்றத்தை கொடுத்த மன்சூர் கறைபடியாத கரங்களைக் கொண்டவர்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தை ஏனைய தேசிய பல்கலைக்கழகங்கள் போன்று அனைத்து பௌதீக வளங்களையும் கொண்டதாக சிறந்த தோற்றத்துடன் இன்று காட்சியளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பங்களிப்பே காரணமாகும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“அரசியலில் கறைபடியாத கரங்களைக் கொண்ட ஒரு கனவான் அரசியல்வாதியே ஏ.ஆர்.மன்சூராவார். பாராளுமன்ற உறுப்பினராக, மாவட்ட அமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக அவர் பதவி வகித்தும் கூட ஊழல், மோசடி, இலஞ்சம் என்பவற்றுக்கு துளியும் இடமளிக்காமல் மிகவும் நேர்மையுடன் கல்முனைப் பிராந்தியத்திற்கும் மக்களுக்கும் சேவையாற்றியிருக்கிறார்.

யுத்த காலத்தில் எமக்கென ஒரு பல்கலைக்கழகத்தின் தேவையை வலியுறுத்தி நாம் போராட்டங்களை முன்னெடுத்ததன் பயனாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் தனது அரசியல் பலத்தின் ஊடாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். எனினும் துரதிஷ்டவசமாக சில வருடங்களில் அவர் மரணமடைந்தபோது இப்பல்கலைக் கழகத்திற்கான பௌதீக வள அபிவிருத்தி தொடர்பில் நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குவைத் நாட்டுக்கான தூதுவராக பதவியேற்றுச் சென்ற மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர், தனது தனிப்பட்ட நலன்களுக்கப்பால் வேறு சில்லறை அபிவிருத்திகள் பற்றி சிந்திக்காமல் மிகவும் தூரநோக்குடன் செயற்பட்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுமார் 1000 மில்லியன் ரூபாவை குவைத் நிதியத்தின் இருந்து பெற்றுக்கொடுத்ததன் பிரதிபலனை இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகம் கண்டுகொண்டிருக்கிறது.

இப்பல்கலைக்கழகம் இன்று பேராதெனிய மற்றும் கொழும்பு போன்ற பல்கலைக்கழகங்களுக்கு ஈடான சிறப்புத் தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது என்றால் அதன் பெருமை மன்சூர் அவர்களையே சாரும்.

இவ்வுயர் சேவைக்காக கடந்த வருடம் நடைபெற்ற பல்கலையின் பட்டமளிப்பு விழாவின்போது அவருக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி இப்பல்கலைக்கழகம் அவரை கௌரவித்துள்ளது.

தனது சமூகம் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் என்கின்ற தாகம் அவரிடம் இருந்தது. அதனால்தான் அவர் இப்பாரிய சாதனையை நிகழ்த்திச் சென்றுள்ளார். அவர் தனது பாராளுமன்ற மற்றும் அமைச்சு பதவிக் காலங்களில் கல்முனைப் பிராந்தியத்தின் அனைத்து பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதில் குறியாக இருந்து, அவற்றை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.

இறைவன் அவரது தன்னலமற்ற சேவைகளை பொருந்திக் கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்” என கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*