மன்சூரின் அரசியலில் இன்றைய அரசியல்வாதிகளுக்கு நிறைய படிப்பினைகள் உண்டு; மு.கா.தவிசாளர் மஜீத் அனுதாபம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் தனிப்பட்ட ரீதியிலும் பொது வாழ்க்கையிலும் நெறி பிறழாத நற்பண்புமிக்க ஒரு அரசியல் கணவானாகத் திகழ்ந்துள்ளார். அவரிடம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு நிறையவே படிப்பினைகள் இருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

“ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்க காலத்தில் பாராளுமன்ற தூதுக்குழுவொன்றுக்கு தலைமை தாங்கிச் சென்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றி, கல்முனை தொகுதியின் கீர்த்தியை உலகறியச் செய்தவர் ஏ.ஆர்.மன்சூர், அவர் எமது சமூகத்திற்கும் நாட்டுக்கும் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார்.

அவரது பாராளுமன்ற மற்றும் அமைச்சர் பதவிக்காலமானது கல்முனைத் தொகுதியின் பொற்காலம் என்று அனைத்து தரப்பினராலும் சிலாகிக்கப்படுகிறது. அந்தளவுக்கு இப்பிராந்தியத்தில் அபிவிருத்தி பணிகளை அவர் முன்னெடுத்துள்ளார்.

இலங்கை- இந்திய ஒப்பந்தம், இந்திய படைகளின் வருகை மற்றும் தமிழ் ஆயுதக்க குழுக்களின் நெருக்கடிகள் முஸ்லிம் மக்களை இனத்துவ அரசியலின் பால் ஈர்க்கச் செய்தது. இதனால் முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமாக உருவெடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்பாடுகளை பின்னாட்களில் ஏற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் மன்சூர் 2002 ஆம் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார்.

அவரது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை கௌரவப்படுத்தியும் அவரது அனுபவம், ஆற்றல்கள் மூலம் தொடர்ந்தும் சமூகத்திற்கு சேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அதே ஆண்டு அவரை குவைத் தூதுவராக எமது கட்சி பரிந்துரை செய்ததன் பேரில் அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இதன் மூலமே பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை குவைத் நிதியின் ஊடாக மன்சூரினால் அபிவிருத்தி செய்ய முடிந்தது. தனக்கு கிடைத்த ராஜதந்திர பதவியைக் கூட அவர் தனது சுகபோகத்திற்கு அல்லாமல் சமூகத்திற்கும் நாட்டுக்கும் சேவையாற்றுவதற்க்கே முழுமையாக பயன்படுத்தி, தனக்கு வழங்கப்பட்ட அமானிதத்தை பாதுகாத்து மிகச்சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்.

மன்சூர் அவர்களின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து, மறுமை வாழவை சிறப்பாக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்” என்று மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*