தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு; சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.ஜுனைதீனின் பதிவு..!

அந்தக் காலத்தில் இப்பிரதேச பல்கலைக்கழக மாணவர்கள் இன மோதல்கள் காரணமாக தமக்குரிய பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் அம்பாறை மாவட்டத்தில் பல போராட்டங்களை நடத்தினார்கள்.

குறிப்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதய அரச வர்த்தகக் கூட்டுத்தானத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்கள் இப்போராட்டத்திற்கு முன்னின்று உழைத்தார்கள். இவர்களின் போராட்டங்களை தேசியப் பத்திரிகைகளில் வெளிவர என்னை நாடி எனது வீட்டுக்கு கூட வந்திருக்கிறார்கள்.

தற்போது சம்மாந்துறை பல்கலைக்கழக் வளாகம் இருக்கும் இடம் அன்று நெற் சந்தைப்படுத்தும் களஞ்சிய சாலையாக இருந்தது. அன்று அவ்விடத்தில் கூட பாதிக்கப்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது எனக்குத் தெரியும். அந்த இடத்திற்கு நான் நேரடியாகச் சென்று நிலவரங்களை அறிந்தேன்.

மர்ஹும் தொப்பி முஹைதீன் அவர்களின் சகோதரர் பள்ளித்தலைவராக இருந்தவர். அவர் அங்கு வந்து மாண்வர்களிடம் உங்களின் இந்தப் போராட்டத்தைக் கைவிடுங்கள் நான் கொழும்பில் தற்போது இருக்கும் எம்.பி. முஹைதீன் அவர்களிடம் உங்களின் நியாயமான கோரிக்கையை உறைப்பாகச் சொல்கின்றேன் என்று வாக்குறுதி வழங்கியபோது நான் அவ்விடத்தில் நேரடியாக இருந்தேன்.

பின்னர் இது சம்மந்தப்பட்ட செய்தியை மர்ஹும் தொப்பி முஹைதீன் அவர்களின் வீட்டிற்குப் போய் தொலைபேசி மூலம் நான் கடமை செய்த ஊடகத்திற்கு வழங்கினேன்.

அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படல் வேண்டும் என்ற ஏ.எம்.ஜெமீல் தலைமையிலான போராட்டம் சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை போன்ற இடங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் அழைத்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் போல் நடத்தப்பட்டது.

அதனால் பொதுமக்களுக்கு இவர்களின் போராட்டங்கள் அன்று சரியாகத் தெரிய வரவில்லை. என்னால் அனுப்பப்பட்ட இது தொடர்பான செய்திகள் சில தேசியப் பத்திரிகையில் அன்று முன்பக்கத்தில் கூட வந்தது.

சுருக்கமாகச் சொன்னால் மாணவர்களின் போராட்டத்தின் பிரதிபலனாகக் கிடைக்கப்பெற்றதே தென்கிழக்குப் பல்கலைக்கழகம். அது யாருடைய சிந்தனையில் உதித்த ஒன்றல்ல.

இது மாணவர்களின் போராட்டத்தினால் அரசியல் நோக்கம் காரணமாக வர்த்தமாணி மூலம் அவசரமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும்.

மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் இப்பல்கலைக்கழகத்திற்கு நிதி பெற்றுக்கொடுக்க முயற்சித்த போதுதான் இப்பல்கலைக்கழகம் முறையான ஏற்பாடுகளுடன் உருவாக்கப்படவில்லை என்ற விடயம் தெரிய வந்தது.

பின்னர் அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரப் அவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி அமைச்சர்கள், அதிகாரிகளின் உதவி, ஒத்தாசைகளுடன் இப்பல்கலைக்கழகம் சரியான் ஒழுங்கில் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகமாக சகல காரியங்களையும் செய்து பெரும் தொகையான குவைத் நிதி இப்பல்கலைக்கழகத்திற்கு பெறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*