சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரகடனத்திற்கு தயாராகிறார் பைஸர் முஸ்தபா; பூரிப்படைகிறார் ஜெமீல்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் விரைவில் அதற்கான வர்த்தமானி பிரகடனத்தை வெளியிடுவதற்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தயாராகி வருகிறார் எனவும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் காணப்படும் மந்தமான சூழ்நிலை பற்றி கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்;

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் நானும் தொடர்ச்சியாக விடுத்து வந்த வேண்டுகோளை ஏற்று சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மிகவும் கரிசனையுடன் முன்னெடுத்து வருகின்றார். தற்போது அந்நடவடிக்கை இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கிறது.

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரதேசத்தை தனியான உள்ளூராட்சி சபையாக உருவாக்கும் விடயத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரால் அரச உயர் மட்டத்தில் பலத்த எதிர்ப்பு காட்டப்படுவதனால் அது தொடர்பிலான முன்நகர்வுகளை எம்மால் அவ்வப்போது பகிரங்கப்படுத்த முடியாமல் இருந்தது. அதனால்தான் பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவடையும் வரை நாம் இரகசியம் பேண வேண்டியிருக்கிறது. இது எமது மக்களுக்கு மந்தமான சூழ்நிலையாக தெரிந்தாலும் எவ்வித பின்னடைவுக்கும் இடமளிக்காமல் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் சென்றிருக்கிறோம் என்பதே உண்மையாகும்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கான ஒழுங்கு விதிகள் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைள் விரைவுபடுத்தப்பட்டு, தற்போது நிறைவுறும் தருணத்திற்கு வந்துள்ளது.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி பிரகடனத்தை விரைவில் வெளியிடுவதற்கான ஒழுங்குகளை தான் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழியில் மேற்கொண்ட அத்தனை சதி நடவடிக்கைகளையும் முறியடித்தே சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை அடைவதற்கான பயணத்தில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

நான் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக பதவி வகித்த வேளையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாத அமர்வில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டு சென்றேன். அப்போது அப்பிரேணையை விவாதத்திற்கு விடாமல் தடுப்பதற்கும் சமர்பிக்கப்பட்டால் தோற்கடிப்பதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கடும் பிரயத்தனம் எடுத்திருந்தது. ஆனால் நான் பின்வாங்காமல், தான் அங்கம் வகித்த கட்சியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிரேரணையை சமர்ப்பித்து, மாற்றுக்கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியிருந்தேன்.

இதன் பயனாக சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான கிழக்கு மாகாண சபையின் பரிந்துரையை, அன்றே உள்ளூராட்சி அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தேன். அதன் பிறகு எதுவும் செய்ய முடியாமல் தாமும் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கு ஆதரவுதான் என்று கூறிக்கொண்டு ரவூப் ஹக்கீமும் எச்.எம்.எம்.ஹரீஸும் நாடகங்களை அரங்கேற்றத் தொடங்கினர்.

கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கல்முனை நகரில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை உருவாக்கித்தரப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாவினால் உறுதிமொழியை வழங்கச் செய்தார்கள்.

ஆனால் இதுவரை பிரதமர் மட்டத்தில் அதற்கான நடவடிக்கை எதனையும் எடுக்க செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முயற்சிக்கவில்லை. அதேவேளை மறுபுறம் எமது தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் எடுக்கப்பட்ட முயற்சிகளை குழப்புவதிலும் தடுப்பதிலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தீவிரம் காட்டி வந்தார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருக்க முடியாது.

இதைத்தான் அமைச்சர் பைஸர் முஸ்தபா சாய்ந்தமருதுக்கு வந்து பகிரங்கமாக கூறிச் சென்றார். அப்போது அவர் மு.கா.வின் நாடகத்தை அம்பலப்படுத்தியதனால் ஆத்திரமடைந்த ரவூப் ஹக்கீம், இனிமேல் உள்ளூராட்சி அமைச்சரும் அவரை அழைத்து வந்தோரும் முடியுமானால் இந்த உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொடுக்கட்டும் என்ற தோரணையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டு எம்பக்கம் பந்தை அடித்து விட்டு, தடுப்பதில் முனைப்பு காட்டி வந்தார்.

அல்ஹம்துலில்லாஹ், எமது இஹ்லாஸ் எனும் தூய்மையான போராட்டம் நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் வெற்றியை ஈட்டித்தந்துள்ளது. எவ்வாறாயினும் இரு முகங்களுடன் நாடகமாடி, தடுத்து, தடுத்து தோல்வி கண்டுள்ள மு.கா.தலைவரும் பிரதி அமைச்சர் ஹரீஸும் இவ்விடயம் நிறைவேறுகின்ற தருணத்தில் எமது உள்ளூராட்சி சபைக்கு உரிமை கோருவதில் வெட்கமின்றி முன்னிலை வகிப்பார்கள் என்பதை எவரும் நான் சொல்லி அறிய வேண்டியதில்லை.

நான் முன்னெடுக்கும் எந்தவொரு சமூக, பிரதேச நலன்சார் போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியது கிடையாது. எமது சமூகத்திற்காக பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் அதிகார பலத்தின் மூலம் தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கிய ஆத்ம திருப்தியால் நிரம்பியுள்ள என் இதயம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் பக்கபலத்துடன் எமதூர் மக்களுக்கான உள்ளூராட்சி அதிகாரத்தை பெற்றுக்கொடுத்து, ஓர் உன்னதமான பணியை நிறைவேற்றுகின்ற தருணத்தில் வானளாவ பூரிப்படைகின்றது” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*