றிஷாட், ஜெமீல் ஆகியோரின் உளத்தூய்மையான முயற்சிக்கு கிடைத்த வெற்றியே சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை..!

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கான வர்த்தமானி பிரகடனத்தை இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் விசேட அழைப்பின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போதே சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கான வர்த்தமானி பிரகடனத்தை இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைள் யாவும் பூர்த்தியடைந்திருப்பதாகவும் விரைவில் அதற்கான வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட முடியும் எனவும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் றிஷாட் பதியுத்தீன், கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோர்; நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இன்னும் காலம் தாமதிக்காமல் இதனை உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம் தேவையற்ற அரசியல் தலையீடுகள், தடங்கல்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் உரையாடிய அமைச்சர் பைஸர் முஸ்தபா, வர்த்தமானியை வெளியிடுவதற்காக இம்மாதம் இறுதி பகுதியில் திகதி ஒன்றை நிர்ணயித்து, அவ்விடயத்தை அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் மற்றும் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா; அமைச்சர் றிஷாட் பதியுத்தீன், கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோரின் அழைப்பின் பேரில் சாய்ந்தமருத்துக்கு சென்று, அந்த மக்களுக்கு நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலம் கனிந்திருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்,

அமைச்சர் றிஷாட் பதியுத்தீன், கலாநிதி ஜெமீல் ஆகியோரின் விடா முயற்சிகள் வீண் போகவில்லை. அவர்கள் என் பின்னால் முழுமூச்சாக நின்றார்கள். எனது அமைச்சுக்கு அடிக்கடி வந்து எனக்கும் அதிகாரிகளுக்கும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது உளத்தூய்மையான முயற்சிகளுக்கு இறைவன் என் மூலம் வெற்றியைக் கொடுத்துள்ளான். இது விடயத்தில் சிலர் நடித்துக்கொண்டு, சாய்ந்தமருது மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். அவ்வாறானவர்களுக்கு இதில் உரிமை கோருவதற்கு அருகதை கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*