கல்முனை நகர மண்டபம் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றின் பாவனையில் இருந்து வந்த கல்முனை நகர மண்டபம் தற்போது கல்முனை மாநகர சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை மாநகர சபையின் கடந்த கால முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய பொதுச் சபை மற்றும் நிதிக்குழு என்பவற்றின் தீர்மானத்திற்கு அமைவாக குறித்த நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்த கல்முனை நகர மண்டபத்தை மாநகர சபையிடம் மீள ஒப்படைப்பதற்கு கடந்த 31 ஆம் திகதி வரை அந்நிறுவனத்திற்கு இறுதிக்காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த நகர மண்டபத்தை கல்முனை மாநகர சபை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதுடன், அதன் திருத்த வேலைகளுக்காக தற்போது மாநகர சபையின் பொறியியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நகர மண்டபமானது நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை பரப்பப்படுகின்றது. அது தவறான கருத்தாகும்.

உண்மையில் மாநகர சபை கட்டளைகள் சட்டத்தின் 267 ஆம் பிரிவின் உப பிரிவு 3 இன் கீழ் 1989 ஆம் ஆண்டின் 541/17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் பகுதி LVII இற்கு அமைவாக மாநகர சபை நிர்வாகத்தினால் இக்கட்டிடம் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்ததோடு தேவையான கால நீடிப்புகளும் வழங்கப்பட்டிருந்தது என்பதை அறியத் தருகின்றேன்” என ஆணையாளர் ஜே.லியாகத் அலி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*