ராஜினாமா செய்தாலும் வீட்டோடு இருந்து கொள்ளுங்கள்; அரசியல்வாதிகளுக்கு சாய்ந்தமருதில் சாட்டையடி..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர், யூ.கே.கலித்தீன்)

சாய்ந்தமருதில் தற்போதுள்ள நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு யாராவது தாம் வகிக்கின்ற பதவிகளை இராஜினாமா செய்து விட்டு வந்திருக்கின்றோம் என்ற மாயையை ஏற்படுத்திக்கொண்டு தங்களது பயணத்தில் இணையும் எண்ணம் இருந்தால் அந்த என்னத்தைக் கைவிடுமாறு சாய்ந்தமருது- மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அவ்வாறு இராஜினாமா செய்தாலும் உங்களது வீடுகளிலேயே இருந்து கொள்ளுங்கள் என்றும் அப்படி தங்களது புனித பயணத்தில் இணைய விரும்பினால் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை பிரகடனப்படுத்திய அரச வர்த்தமானியை கையேடு கொண்டுவருமாறும் அவ்வாறு வந்தால் மிகப்பிரமாண்டமான மேடையில் வரவேற்க காத்திருப்பதாகவும் பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருதில் உள்ளுராட்சி சபையை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் பிரமாண்டமான ஒன்று கூடல்கள் இடம்பெற்று வரும் சூழலில் இன்று 2017-10-30ஆம் திகதி சாய்ந்தமருது- மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் வெளியிட்டுள்ள அவசர ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைக் கோரிக்கை சம்மந்தமாக பல இடங்களில் அலைந்து நிறைய அரசியல்வாதிகளை சந்தித்தும் ஏமாற்றங்கள், கழுத்தறுப்புக்கள் மற்றும் சதிகளை சந்தித்ததாகவும் ஏமாற்றப்பட்டுள்ள நிலையிலேயே போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினரும் போது அமைப்புக்களும் கொண்டு செல்வதாகவும் நம்பியிருந்த அரசியல்வாதிகள் கோரிக்கையை கொச்சைப்படுத்தியுள்ளதால் இவர்கள் மீது நம்பிக்கையிழந்து இருப்பதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

எனவே வழமையான ஆட்டம் ஆட வந்தால் அது தங்களது உணர்வுபூர்வமான போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போலாகிவிடும். இந்த முடிவை உங்களது கடந்தகால வரலாற்றுச் செயற்பாடுகள் தான் தங்களை இவ்வாறு கூற வைத்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை பள்ளிவாசலுக்கு முன்னாள் திரண்டிருந்த மக்கள் மத்தியில் வாசிக்கப்பட்டு, அல்லாஹ் அக்பர் கோஷத்துடன் ஆமோதிக்கப்பட்டது.

சாய்ந்தமருதை சேர்ந்த ஓர் அரசியல்வாதி தனது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு போராட்டத்தில் இணைந்து கொள்ள வருகை தருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே இவ்வறிக்கை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*