சாய்ந்தமருது அபிலாஷை நிறைவேற சம்பந்தன் ஐயா உதவ வேண்டும்; பள்ளிவாசல் தலைவர் ஹனிபா வேண்டுகோள்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதற்கு எதிர்க்கட்சித்தலைவர் ஆர்.சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும் என சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா ஹாஜியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாய்ந்தமருது கடற்கரை ஹுதா திடலில் இன்று செவ்வாய்க்கிழமை (21 ) இரவு மீனவ சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தனி உள்ளூராட்சி மன்றத்திற்கான மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மூன்று தசாப்த காலமாக சாய்ந்தமருது மக்கள் கோரி வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்தி தருவதாக அனைத்து அரசியல் தலைவர்களும் உறுதியளித்து வந்துள்ளனர். என்றாலும் எல்லா ஏற்பாடுகளும் வெற்றிகரமாக நிறைவுற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவிருந்த இறுதித் தருவாயில் அவர்கள் மிகவும் நயவஞ்சகத்தனமாக தடுத்து விட்டனர்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை என்ற பந்து இப்போது சம்பந்தன் ஐயாவின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் நாம் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம், எங்களது மக்களின் அபிலாஷையை நிறைவேற்றித் தாருங்கள். இந்த விடயத்தில் நீங்கள் நீதமாக நடப்பீர்கள் என நாங்கள் மிகவும் நம்புகின்றோம் எங்களது நம்பிக்கைக்கு அநீதியிழைக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம்.

நாம் ஆதரித்து- வாக்குப்போட்டு அமைச்சர்களாக வலம் வருகின்ற அரசியல் தலைமைகளினால் நாம் ஏமாற்றப்பட்டு- வஞ்சிக்கப்பட்டுள்ளோம். நாம் அரசியல் குரலற்ற மக்களாக நடு வீதி கொண்டு வரப்பட்டுள்ளோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எங்களுக்கு உதவுங்கள். நீங்கள் எமக்கு உதவும் பட்சத்தில் எதிர்காலத்தில் நாங்களும் உங்களுக்கு பக்கத்துணையாக இருப்போம்.

சாய்ந்தமருது மக்கள் யாருக்கும் எதிரானவர்களோ எவரதும் அபிலாஷைகளுக்கும் எதிரானவர்களோ இல்லை. நிந்தவூரில் இருந்து காரைதீவு பிரிந்து சென்றபோதோ சம்மாந்துறையில் இருந்து நாவிதன்வெளி பிரிந்து சென்றபோதோ முஸ்லிம் மக்கள் குறுக்காக நிற்கவில்லை. நாங்கள் எப்போதும் தமிழ் மக்களுடன் இணைந்தே வாழ விரும்புகின்றோம். நாம் எவருக்கும் அநியாயம் இழைக்க நினைக்கவில்லை.

இவ்வாறன சூழ்நிலையில் தற்போது கல்முனையில் விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சினையை எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்க்கதரிசனமாக விட்டுக்கொடுப்புகளுடன் சுமூகமாக தீர்த்து வைத்து, எமக்கான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு சாய்ந்தமருது மக்காள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*