சாய்ந்தமருத்துக்கு சபை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான்கு பிரிப்பை முன்வைத்தேன்!

-கலீல் எஸ் முஹம்மத்-  

சாய்ந்தமருத்துக்கு சபை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான்கு பிரிப்பை முன்வைத்தேன். சாய்ந்தமருதுக்கு சபை வழங்க துணிந்து முதலில் அதற்கான பணியில் ஈடுபட்டவன் நான், இதனை இன்னும் ஏன் சாய்ந்தமருது மக்கள் புரிந்துகொள்ள முடியாமலுள்ளனர். அரசியல் ரீதியாக இத்தனை எதிர்ப்புகளையும் இழப்புகளையும் சம்பாதித்தேன் எனது கட்சி  உறுப்பினரை இழந்திருக்கிறேன் இத்தனையும் யாருக்காக என்பதனை புரிய முடியாமல் இருப்பது வேதனை தருகிறது.

நேற்று எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கல்முனை பிரிப்பு விவகாரம் தொடர்பில் கோடீஸ்வரன் சாய்ந்தமருதை முதலில் பிரியுங்கள் என்று கூறியதற்க்கு இல்லை நாலகத்தான் கல்முனை பிரிக்கப்படல் வேண்டும் என அமைச்சர் அதாஉல்லா தெரிவித்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் நிலவும் சர்ச்சை தொடர்பில் அவரை தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்;

ஹரீஸும் ஹக்கீமும் இதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கவே விரும்புகின்றனர். ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் இதனை பிரிக்கவேண்டும் என உறுதியாக நேற்றைய கூட்டத்தில் தெரிவித்திருக்கிறேன்.

தற்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எமக்கு இன்னும் காலம் இருக்கிறது இதனை சரிவர பயன்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உடனடியாக பேசுதல் வேண்டும் இன்னும் இன்னும் இழுத்தடிக்க கூடாது. காலம் தாமதிக்க கூடாது. இந்த பிரிப்பு கல்முனை தமிழ், கல்முனைக்குடி முஸ்லீம் இரு ஊர்களும் சம்பந்தப்பட்டதாகும் இதில் சாய்ந்தமருது மக்கள் கலந்துகொள்ள தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு மிகத்தெளிவான எல்லை இருக்கிறது. மட்டுமல்லாது  சாய்ந்தமருத்துக்கு சபை வழங்குவதில் என்னிடம் எந்த மாற்று கருத்தும் இல்லை.

எனது மிகப்பெரும் பணி சாய்ந்தமருது கல்முனைக்குடி மக்களிடம் காணப்படும் வைராக்கியத்தை கைவிட வைக்க வேண்டும். கல்முனை நகரம் என்பது மாளிகைக்காட்டில் தொடக்கி நீலாவணை வரைக்குமாகும். நிர்வாக ரீதியாக அபிவிருத்தி தேவையை பூர்த்தியாக்குவதே உள்ளூராட்சி மன்றமாகும். அதனையே சாய்ந்தமருது மக்கள் கோருகின்றனர்

சாய்ந்தமருது மக்கள் எனது மக்கள் அதேபோல் கல்முனை குடி  மக்களும் எனது மக்கள். இதனை முடிவுக்கு கொண்டு வரவில்லையானால் தேர்தல் காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கும். அரசியல் தலைவர்கள் இருக்கத்தக்கதாக மக்களை வீதிக்கு இறக்குவதில் பாரிய ஆபத்து இருக்கிறது என்பதை புரிய வேண்டும்.

இது குறித்து சம்பந்தனிடம் பாரிய விட்டுக்கொடுப்பை செய்யுமாறு  கூறியிருக்கிறேன். ஒரு கோட்டை முதலில் கீறுங்கள் அதிலிருந்து எந்தப்பக்கம் நாம் அசைந்து கொடுத்து இந்த பிரிப்பினை செய்வது  என்பதை பேசுவோம் தீர்மானிப்போம்.

ஆனால் சாய்ந்தமருத்துக்கான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையினை நிறைவேற்ற கோடீஸ்வரன் பேசக்கூடாது. அப்படி பேசி பெறுகின்ற சபையை சாய்ந்தமருது மக்கள் ஏற்றுக்கொள்ள கூடாது. அது வரலாற்று நெடுக்கிலும் சாய்ந்தமருது மக்களை குற்றமாக பார்க்கப்படும்.  சாய்ந்தமருது மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம் முஸ்லீம் அரசியல் தலைமைகள் இருக்கிறார்கள். எம்மை சரியாக பயன்படுத்த சாய்ந்தமருது மக்கள் தவறிவிட்டார்கள் என்றே சொல்வேன்

அதேவேளை ஹக்கீமிடமும் இதனை வலியுறுத்தி இருக்கிறேன். இதனை முடித்து வைக்க வேண்டும். விரைந்து காரியமாற்ற வேண்டும்  எனவும் கேட்டிருக்கிறேன். எனக்கும் ஹக்கீமுக்கு அரசியல் ரீதியாகவே பிரச்சினை இருந்தும் நான் அவரிடம் சாய்ந்தமருது மக்களுக்காக பேசி இருக்கிறேன். இதனை சாய்ந்தமருது மக்கள் விளங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*