மாளிகைக்காட்டிலும் பள்ளிவாசல் நெறிப்படுத்தலில் சுயேச்சைக்குழுவை களமிறக்க தீர்மானம்..!

(சகா தேவராஜா, யூ.கே.காலித்தீன்)

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு கிராமம் சார்பாக சுயேச்சைக்குழுவை இறக்க சாய்ந்தமருது- மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அதற்கான முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் போராட்டங்களின் வரிசையில் நிரைவேற்றப்பட்ட ‘சாய்ந்தமருது பிரகடனத்தின்’ அடிப்படையில் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேற்சைக் குழுவை களமிறக்க சாய்ந்தமருது-மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் மக்கள் பணிமனை தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கைக்கும் சுயேற்சைக் குழுவுக்கும் ஆதரவு தெரிவித்து நேற்று இஷாத் தொழுகையை தொடர்ந்து மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் கேலியன்ஸ் விழையாட்டுக் கழகம், ரியல் பவர் விழையாட்டுக் கழகம், கிராம அபிவிருத்தி சங்கம், சாய்ந்தமருது- மாளிகைக்காடு- கல்முனை நண்பர்கள் நட்புறவு அமைப்பு என்பன கூட்டாக ஏற்பாடு செய்திருந்த ஆரம்பகட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாளிகைக்காடு மீனவ சமூகம், புத்திஜீவிகள், பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டதோடு சாய்ந்தமருது மாளிகைகாடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா, செயளாலர் எம்.ஐ.அப்துல் மஜீட், சாய்ந்தமருது- மாளிகைகாடு ஜம்மியத்து உலமா சபை தலைவர் மௌலவி. எம்.எம்.சலீம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை காரைதீவில் சுயேச்சைக்குழு மட்டுமே போட்டியிடுமென காரைதீவு ஊர்ப்பொது மக்கள் தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் நேற்று விபுலானந்த மணி மண்டபத்தில் அதற்கான வேட்பாளர் தொரிவு நடைபெற்றமை தெரிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*