சாய்ந்தமருதுவில் ACMC வேட்பாளர்களை நிறுத்த மாட்டாது; அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அறிவிப்பு..!

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து தமது கட்சி வேட்பாளர்களை நிறுத்த மாட்டாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் சற்று நேரத்துக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளுக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் நிலைப்பாட்டுக்கும் எதிராக தனது கட்சி செயற்பட மாட்டாது. எனவே, நாம் அங்கு வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்ற எமது கட்சியின் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி, தோல்வி என்ற விடயங்களுக்கு அப்பால் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தீர்மானத்துக்கு கட்சி என்ற அடிப்படையிலும் தனி நபர் என்ற ரீதியிலும் கௌரவம் அளிக்க வேண்டியுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகம் என்பது அந்தப் பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு. இந்த நிலையில் நாம் அவர்களின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படுவது அந்த மக்களின் அபிலாஷைகளையே குழி தோண்டி புதைப்பதாக முடியும்.

கட்சியின் நலனை விட சமுதாயத்தின் நலனே எமக்கு முக்கியம். மேலும், எமது கட்சியின் நலனை மையப்படுத்தி போட்டியிட்டு பள்ளிவாசல் நிர்வாகம், ஊர்ம க்கள், எங்களது கட்சி ஆதரவாளர்கள் என்ற மூன்று தரப்பினர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கப் போவதில்லை.

எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருதுவில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டாது என்பதனை உத்தியோகபூர்மாக அறிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை, கல்முனைத் தொகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் நலனில் தொடர்ந்தும் எமது கட்சி அக்கறையுடன் செயற்படும்.

எம் மீது எவ்வாறான விமர்சனங்கள், அல்லது வேறு வகையிலான அவமதிப்புகளை அந்த மக்கள் முன்னடுத்திருந்திருந்தாலும் நாம் அந்த மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே உள்ளோம்.

நாங்கள் எமது கட்சியின் நலனை மட்டும் மையப்படுத்தி அந்தப் பிரதேசத்துக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர் நாங்கள். சமுதாய நலனுக்காகவே செயற்படுகிறோம். செயற்படுவோம் என்பதனையும் இங்கு பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்னிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*