அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க.வேட்பாளர்களை கூட நாமே தீர்மானித்துள்ளோம்; முகவர்களும் நாமே என்கிறார் ஹக்கீம்..!

“அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள்தான் தெரிவு செய்துள்ளோம். அவர்கள் நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களாக இருந்தாலும் சரி, நாங்கள்தான் அவர்கள் போட்டியிடுவதை தீர்மானித்துள்ளோம்.

அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலுமே ஐக்கிய தேசியக் கட்சியோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றதே தவிர எமது கட்சியை ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் நாம் அடகு வைத்து வைத்து விட்டு போட்டியிடவில்லை” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில இடங்களில் மரச்சின்னத்தில் தனித்தும், அம்பாறை மாவட்டம் உட்பட இன்னும் சில இடங்களில் ஐக்கிய தேசியக்கட்சியோடு இணைந்து யானை சின்னத்திலும் ஒரு சில இடங்களில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிலும் மற்றும் சில இடங்களில் துஆ எனும் ஜனநாயக ஐக்கிய முன்னணியிலும் இணைந்து நான்கு விதமாக போட்டியிடுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்ற முடிவானது, மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு எல்லோராலும் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த இணைப்பின் மூலம் எமது கட்சிக்கு கிடைக்கின்ற வாக்குகளைக் கூட்டிக்கொள்வதற்காக தேவையான வியூகங்களை வகுப்பதற்காகவே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் எதனையும் அடகு வைக்கவில்லை என்பதை நான் மிகவும் தெளிவாகவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள்தான் தெரிவு செய்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதை நாங்கள்தான் தீர்மானித்துள்ளோம். அந்தளவு அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் எங்களுக்கு தந்துள்ளது. அந்த உரிமையுடன்தான் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அனைத்து சபைகளுக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை நாங்கள்தான் தயாரித்திருக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முகவர்களாக எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*