சாய்ந்தமருதில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பே..!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இரண்டாம் கட்ட 248 மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை தாக்கல் செய்வதற்கான காலமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது நிறைவுற்றதும் நாடு பூராகவும் அமைந்திருக்கின்ற 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் திகதியை தேர்தல்கள் ஆணையகம் அறிவிக்க இருப்பதும் நாம் அறிந்ததே.

நமது தேசத்தில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற கட்சிகள், சுயேட்சை குழுக்கள் பொதுவான எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் தேர்தலில் வெற்றியை அடைந்து உறுப்பினர்களாவதற்கும், உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்குமான நோக்கங்களை முன்னிறுத்தி இத்தேர்தலில் போட்டியிடுவதென்பது வெளிப்படையானது.

கல்முனை மாநகர சபை தேர்தலை பொறுத்தவரை மேற்குறித்த இலக்குகளோடு பல அரசியல் கட்சிகளும் சில சுயேட்சை குழுக்களும் போட்டியிட முனைந்திருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால், விதிவிலக்காக கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்திருக்கின்ற சட்டபூர்வமான தனியான ஒரு பிரதேச செயலகத்தை கொண்டியங்குகின்ற சாய்ந்தமருது மக்கள் தமக்கென்று ஒரு உள்ளூராட்சி மன்றத்தை நிறுவிக்கொள்ளுகின்ற அடிப்படையின் அடையாளமாக இத்தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் அனுசரனை வழங்கி வருவதையும் கடந்த சில மாதங்களாக நாம் அவதானித்து வருகின்றோம்.

சாய்ந்தமருது மக்களின் இந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் தமது ஆதரவை அடையாளப்படுத்தும் மாதிரியிலும் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள காரைதீவு பிரதேச சபையில் அமைந்திருக்கின்ற மாளிகைக்காடு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற இரண்டு வட்டாரங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்களை அர்ப்பணித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் ஊடாக ஊரின் பெயர்கள் இரண்டானாலும் மக்களின் உணர்வுகள் ஒன்றென்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாக நம்மத்தியில் பிரகடனம் செய்யப்பட்டு அது சந்தித்த முதலாவது பொதுத்தேர்தலான 1989களிலிருந்து இறுதியாக நடைபெற்ற 2015 பொதுத்தேர்தல் வரை இம்மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கே அதிகமான வாக்குகளை அளித்து வந்திருப்பதோடு அதுவே முஸ்லிம்களின் ஏக கட்சி என்ற நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலேயே சாய்ந்தமருது மக்கள் ஆதரித்து நின்றனர் என்பதனை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

சாய்ந்தமருது மக்கள் கடந்த 1988களிலிருந்து தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றினை கோரி வந்திருக்கின்றனர். இதனை ஆரம்பத்தில் மறுத்துரைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிந்திய காலங்களில் ஏற்றிருக்கின்றனர். குறிப்பாக வட்டார முறைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வருமேயானால் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதில் எமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்பதை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அக்கட்சி சார்ந்த கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம்.ஹரீஸ் வாக்குறுதி அளித்திருந்தமை மிகப் பிரபல்யமானது.

குறிப்பாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையை கையிலெடுத்து காரியமாற்ற தொடங்கிய காலத்தில் கல்முனை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்திய சாய்ந்தமருதைச் சேர்ந்த இன்றைய தவிசாளர் ஏ.எல்.எம்.மஜீத் , சாய்ந்தமருது அமைப்பாளர் பிதௌஸ், பஷீர் மற்றும் நஸார்தீன் ஆகிய நான்கு பேரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை பெரிய பள்ளி நிர்வாகத்தினர் கேட்டுச் சென்றபோது, அது வழங்கப்பட வேண்டுமென்று வாதாட்டம் செய்தது மட்டுமன்றி அதன் நியாயங்களையும் தெரிவித்திருந்தனர்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் பெற்றுத்தர வேண்டும் என்பதில் அதிக சாய்வுகளைக் கொண்டு இதுவொரு போராட்டமாக வெடிப்பதற்கு முன்னர் வரை பல சந்திப்புக்களை சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்டு இருந்தது என்பதை நாடே அறியும்.

இதன் ஒரு எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அக்கட்சியின் கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களின் பங்குபற்றுதலோடும், விருப்போடும் நாட்டின் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாகவும் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் என்ற உறுதிமொழி மிகப்பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டிருந்த்து.

இடையில் குறுகிய ஒரு காலகட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண சபைகள் , உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர்களிடமும் இக்கோரிக்கை தொடர்பில் முன்வைத்திருந்தனர். அதற்கு அவர்களும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் பெறப்படும் என்பதில் யாரும் ஐயம் கொள்ளத்தேவையில்லை. தந்தே ஆகுவோம் என்று பகிரங்க மேடையில் வைத்து வாக்குறுதியளித்த நிகழ்வும் நடந்தேறியது.

ஆகவே, சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை முஸ்லிம்களிடையே பிரபல்யம் பெற்றிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாகவே ஏற்றிருந்தனர். இதில் முன்னாள் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தவரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மறைமுகமாக சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டிருந்தார். இப்படி முஸ்லிம்களுக்குள் இருக்கக்கூடியதும் ஏற்றத்தாழ்வுகளோடு மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்த இம்மூன்று கட்சிகளும் இந்த விடயத்தை ஏற்றிருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்படிய மூன்று கட்சிகளும் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன என்பதனையும் அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கின்ற பாங்கை வெளிப்படுத்திய்போதுதான் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு போராட்ட சூழலுக்கு நிர்பந்திக்கப்படுகின்றது. இந்நிலையில் மக்களின் ஆதரவும் துணையும் பள்ளி நிர்வாகத்திற்கு தேவையாகின்றது. அதற்காக மக்கள் அழைக்கப்படுகின்றனர். குறித்த பலர் அதற்காக தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்துவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இங்கு ஆதரவை பகிரங்கமாக வழங்குகின்ற மக்களுல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு தங்களை பிரபல்யப் படுத்திக்கொண்ட அல்லது அரசியல் ஈடுபாட்டைக் கொண்டிருந்த பெயர் சொல்லக்கூடியவர்கள் இப்போராட்ட்த்தில் பகிரங்கமாக கலந்துகொள்ளவில்லை என்பது உண்மையே. அதற்காக வேண்டி இப்போராட்டம் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களின் பங்களிப்பில்லாத ஒன்றென்று அர்த்தப்படுத்திவிட முடியாது.

ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் முழுமையாக விலகி நின்றதினால் அதன் நேரடி அரசியல் ஈடுபாட்டாளர்கள் இப்போராட்ட்த்தில் கலந்துகொள்வதின் ஊடாக தமது அரசியல் செயற்பாடும், இருப்பும் கட்சி தலமைத்துவத்தினால் கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடும் என்கின்ற தனிப்பட்ட அச்சத்தின் காரணமாகவும் , சுய இலாபங்கள் மறுதலிக்கப்பட்டுவிடும் என்கின்ற பயத்தின் காரணமாகவும் அவர்கள் ஓரமாகி நின்றுகொண்டு இது முஸ்லிம் காங்கிரஸிற்கு விரோதமானவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு போராட்டம் போன்றும், அவர்களின் அரசியலுக்கு முட்டுக்கொடுக்கின்ற ஒரு ஊன்று கோலாகவும் தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை பயன்படுத்துகின்றனர் என்கின்ற முறைகேடான விமர்சனத்தை முன்வைக்க இன்று முன்வருகின்றனர்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை கட்சி பேதங்களுக்கு அப்பால் எல்லோரும் கூட்டுமொத்தமாக முன்வைத்தும் எதிர்பார்த்தும் இருந்த ஒரு விடயத்தில் மு.கா. நேரடியாக இக்கோரிக்கைக்கு எதிர்நிலையை எடுத்த போது அதன் நேரடி அரசியல் செயற்பாட்டாளர்கள் விலகி நிற்பதை நியாயப்படுத்துவதற்காக இதில் எங்களது பங்குபற்றுதல் இல்லை என்கின்ற ஒரு பாங்கை முன்னிறுத்துகின்றனர். இது உண்மையில் அவர்களது இயலாமையின் வெளிப்பாடாகும். இவ்வாறு நாம் குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்களை இவ்விடத்தில் எடுத்துக்காட்ட முடியும்.

ஒன்று மு.கா. வுக்கு எதிரான அரசியல் கட்சி நடத்துகின்ற தலைமைத்துவங்கள் வேறு சில காரணங்களுக்காக சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை பெற்றுத்தருவதிலிருந்து ஒதுங்கிக்கொள்ளுகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும், அக்கட்சியின் நேரடி செயற்பட்டாளர்கள் என காணப்பட்டவர்கள், அறியப்பட்டவர்கள் பகிரங்கமாக அவர்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக நமது ஊரின் தேவை என்று செயற்படுவதற்கு துணிந்து களமிறங்கியிருக்கின்றனர். இது அவர்களின் கட்சி நலனுக்கு அப்பாலான அர்ப்பணிப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.

இரண்டாவது மு.கா.வினர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வரக்கூடாது என்று இப்போராட்டத்தின் அனுசரணையாளர்களாக இருக்கும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிர்வாகமோ, இப்போராட்டத்தில் தங்களை முன்னிலைப்படுத்துகின்ற மு.கா. வுக்கு எதிரான கட்சியாளர்களோ முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களையோ இப்போராட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என்றோ அல்லது கலந்து கொள்ள வந்த மு.கா. வினர்களை உங்கள் தலைவர் எங்களுக்கு எதிர் என்று சொல்லி விரட்டிவிட்டதாகவோ எந்தப்பதிவும் இல்லை.

ஆகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நேரடி அரசியல் செயற்பாட்டாளர்கள் இப்போராட்டத்தில் கைகோர்க்காமை என்பது அவர்களது தனிப்பட்ட இலாபங்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை முன்னிறுத்தியேயன்றி சமுகநலன் கொணட்தல்ல என்பதை இன்னொரு வகையிலும் எம்மால் நிறுத்துப்பார்க்க முடிகின்றது. அதாவது மு.கா. சாய்ந்தமருதுக்க்கான உள்ளூராட்சி மன்றத்தை தருவது என்கின்ற பாங்கில் நடந்துகொள்கின்ற காலகட்டத்தில் அக்கட்சி சார்ந்த நமது ஊர் மக்களின் பிரதிநிதிகளானவர்கள் தலைவரிடம்கூட நேரடியாகவே இக்கோரிக்கை நிறவேற்றப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர்கள் இப்போது அவர்கள் அதற்கு எதிராக இருப்பதென்பது தலைமைத்துவத்தின் தருவதில்லை என்ற முடிவோடு இணைந்து போனவர்கள் என்பதை தத்துரூபமாக நிரூபிக்கின்றது.

அதுமட்டுமன்றி சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை தருவதென்றால் எமது முஸ்லிம் காங்கிரஸினால்தான் தர முடியும் என்றும் அதை நாங்கள்தான் தருவோம் என்றும் சூளுரைத்து வருகின்றனர். அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் பின்வரும் இரு கேள்விகளுக்கு அவர்கள் நேரடியாக பதில் தர வேண்டும். ஒன்று, தருவதாக முன்னர் வாக்குறுதியளித்துவிட்டு இன்று மறுப்பது ஏன் என்பதை சொல்ல வேண்டும். அந்த காரணம் எதிர்காலத்தில் காரணம் அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது, எப்போது இதை தருவது என்பதை பகிரங்கப்படுத்துவதோடு நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை தருவதிலிருந்து மு.கா. பின்னடைந்ததற்கான நியாயம் என்ன என்பதனையும் தகுந்த ஆதாரங்களோடு யாராலும் மறுதலிக்க முடியாத காரணங்களாக அவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்களால் நியாயப்படுத்துவதற்கு எந்த ஒரு காரணத்தையும் சொல்லாது வெறுமனே நாங்கள் தன் தர முடியும் என்று சொல்வதென்பது மாத்திரம் தந்துவிடுவதற்கு ஆதாரமாகிவிட முடியாது என்பது சிறிய அறிவுடையவர்கள் கூட சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்.

சாய்ந்தமருதுக்கென்று தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்பட்டால் தமிழர்களின் ஆதிக்கம் வந்துவிடும் என்று சொல்கின்றவர்களின் கூற்று பின்வருமாறு அமைகின்றது. கல்முனை, கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் ஆகிய பிரதேச முஸ்லிம்கள் ஒன்றித்து ஒரே கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். ஆதலால், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்கினால் முஸ்லிம்களின் அரசியல் ஆளுமை ஆதிக்கம் கல்முனை மாநகர சபையிடமிருந்து கைநழுவி போய்விடக்கூடும் என்கின்ற, உண்மைக்குப் புறம்பான காரணத்தை முன்னிறுத்தி சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதை சரி காண்கின்ற நிலையை கட்டுடைப்பு செய்துவருகின்ற ஒரு பாங்கை குறிப்பாக கல்முனையைச் சார்ந்த மு.கா.வினர்களும் குறித்த சிலருமாக முன்னெடுத்து வருவதை பகிரங்கமாகவே அறியக்கூடியதாக உள்ளது.

இந்த விடயத்துக்கு எம்மால் அறிவுரீதியாக ஒரு விடையை சொல்ல முடியும். இன்று அமைந்திருக்கின்ற கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது நீங்கலாக 11 வட்டாரங்களிலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் வாய்ப்பு உள்ளது. இதில் மருதமுனையில் நான்கும், நற்பட்டிமுனையில் ஒன்றும் கல்முனைக்குடியில் ஐந்தும், கல்முனை – இஸ்லாமாபத் ஒன்றும் என பதினொரு வட்டாரங்களை முஸ்லிம்கள் கைப்பற்ற முடியும். இதில் மருதமுனை மக்களுக்கு மாநகர முதல்வர் பதவியும், நற்பட்டிமுனை மக்களுக்கு பிரதி முதல்வர் பதவியும் தருவதென்ற உறுதிமொழியை அளித்தும், எம்மோடு சாய்ந்தமருது இல்லை என்பதை கல்முனைக்குடி மக்களுக்குச் சொல்லியும் முஸ்லிம் அரசியல் ஆதிக்கத்தை கல்முனை மாநகர சபையில் தக்கவைத்துக்கொள்ள முடியும். இதற்கு மேலாக விகிதாசார அடிப்படையிலும் சுமார் எட்டு தொடக்கம் பத்து வரை ஆசனங்களை முஸ்லிம்கள் பெறக்கூடியதாக அமையும்.

கல்முனை முஸ்லிம் சமூகத்தினர்களிடம் அறிவுரீதியான விடையை ஏற்காத ஒரு போக்கு காணப்படுவதினால், இதனை ஒரு அனுபவ ரீதியாகவும், பிரத்தியட்சமாகவும் நிரூபிக்க வேண்டிய ஒரு தேவை சாய்ந்தமருது மக்கள் மீது சுமத்தப்படுகின்றது. அவ்வாறென்றால் எவ்வாறு இதனை செயற்பாட்டு ரீதியாக நிரூபிப்பது?. என்ற கேள்விக்கு விடையாகத்தான் சாய்ந்தமருது மக்கள் இத்தேர்தலில் ஒரு சுயேட்சை குழுவை நிறுத்தி தமது ஊரிலுள்ள ஆறு வட்டாரங்களையும் வெற்றி கொள்ளச் செய்வதன் ஊடாக கல்முனை மாநகர சபை முஸ்லிம்களிடமிருந்து பறிபோகாது என்பதை நிரூபித்துக்காட்ட ஏதுவான வழியாகும். அதனால்தான், இவ்வூரிலிருந்து ஒரு சுயேட்சை குழு நிறுத்தப்படுவதன் தாற்பரியமாகும்.

சாய்ந்தமருது மக்களின் பெரும்பாலானவர்கள் தங்களுக்கென ஓர் உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர் என்பதனை நிரூபிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் இத்தேர்தலை அவர்கள் ஆக்கிக்கொள்ள வேண்டிய கடப்பாடும் அம்மக்கள் மீது உள்ளது. இவற்றின் வெளிப்பாடகவும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் அனுசரனையுடன் நிறுத்தப்படுகின்ற சுயேட்சை குழுவிற்கு தமது வாக்குகளை அளித்து நிரூபித்து காட்டுவதற்கும், இந்த சந்தர்ப்பத்தைவிட்டால் வேறு சந்தர்ப்பம் வரப்போவதில்லை.

ஆனால், குறுக்குவழியில் சாய்ந்தமருதுக்கு ஒரு உள்ளூராட்சி மன்றம் வழங்கப்பட்டால் கல்முனை முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு வாக்களிக்காது என்பதை எடுத்துக்காட்டும் முகமாக வழமையாக நிறுத்தப்படுகின்ற சுயேட்சை குழுக்களுக்கு அப்பால் வாக்குகளை பிரித்துக்கொள்வதற்காக நிறுத்தப்படுகின்ற ஒரு சுயேட்சை குழு கல்முனைக்குடியிலிருந்து தங்களை தயார்படுத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது. இது வெளிப்படையில் மு.கா. மீதான அதிருப்தியும் இன்றைய அதன் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம்.ஹரீஸின் அரசியல் நிலையை குலைய செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ர்ற ஒரு திட்டமிட்ட செயலாகவும் இதனைப் பார்க்க முடியும்.

எது எவ்வாறிருந்தாலும் சாய்ந்தமருதிலிருந்து உள்ளூராட்சி மன்றத்தின் தேவையை சான்றுப்படுத்தும் வகையில் நிறுத்தப்படுகின்ற சுயேட்சைக் குழுவை சாய்ந்தமருது மக்கள் எதற்கும் அஞ்சாது ஆதரிப்பதற்கு துணிய வேண்டும். இது இம்மக்கள் மீது மறைமுகமாக நட்த்தப்படுகின்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்பு போன்ற ஒரு தேர்தலாகவும் கருதிச் செயற்பட வேண்டிய கட்டாயத்தையும் நமது மக்கள் மீது விதியாக்கி இருக்கின்றது.

இவ்விடயத்தில் நமது சாய்ந்தமருது மக்கள் மூன்று காரணங்களை மிகுந்த அவதானிப்புடன் கருத்திலெடுத்து ஆற்றுப்படுத்த வேண்டிய பொறுப்பும் அம்மக்கள் மீது இருப்பதை மறந்தும், மறுத்தும் விடாத உறுதி நிலை தேவைப்படுகின்றது.

1. எமக்கென்று தனித்துவமான சபை ஒன்று உருவாவதை உறுதிப்படுத்துவதற்காக வாக்களிக்கின்றோம்.

2. கல்முனை மாநகர சபை ஆட்சி எந்த முஸ்லிம் அரசியல் கட்சி சார்ந்து அமைகின்றது என்பதற்கு அப்பால் முஸ்லிம்களிடமிருந்து பறிபோகாது என்பதை அச்சொட்டாக நிரூபிக்கின்றோம்.

3. அவர்கள் அச்சப்படுவது போல் சதித்திட்ட்த்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் ஆட்சி நிலை சாய்ந்தமருதின் ஆறு பிரதிநிதித்துவத்தினால்தான் இழக்கப்படுகின்றது என்கின்ற நிலை தோன்றுமேயானால், ஒரு முஸ்லிம் முதல்வரை தெரிவு செய்ய சாய்ந்தமருதில் தெரிவாகின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் கைகொடுத்து உதவக்கூடிய சட்ட ஏற்பாடும் நடைபெறப்போகின்ற உள்ளூராட்சி முறைமையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிட்த்தக்கது.

இத்தகைய சூழல் இருக்கின்ற நிலையில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசலின் அனுசரனையோடு நிறுத்தப்படுகின்ற சுயேட்சைக் குழுவிற்கு வேறு அரசியல் சாயங்களைப் பூசி முஸ்லிம் காங்கிரஸினர்கள் தப்பித்துக்கொள்வதற்கு வழிதேடுவது முறையல்ல. உண்மையில் முஸ்லிம் மக்களிடையே இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் சாய்ந்தமருது மக்களின் நியாயத்தை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கும் வகையில் தமது கட்சியின் வேட்புமனுவின் நியமனத்தில் சாய்ந்தமருது வட்டாரங்களுக்கு பெயர்குறித்து நியமிப்பவர்கள் பெயரளவு வேட்பாளர்களாக – டம்மி நிலையில் போடுவதுதான் இந்த ஊர் மக்களுக்கு செய்கின்ற உபகாரம் என்பதையும் அவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

எம்.எம்.எம்.நூறுல்ஹக்,
சாய்ந்தமருது–05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*