வேறு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு சாய்ந்தமருது பள்ளிவாசல் எவருடனும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் வேறு அரசியல் கட்சியொன்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு எமது பள்ளிவாசல் எவருடனும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மக்கள் பணிமனை சார்பில் களமிறங்கியுள்ள சுயேட்சைக்குழு வேட்பாளர் ஏ.ஆர்.எம்.அஸீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் சுயேட்சைக் குழுவுக்கான தேர்தல் காரியாலயம் ஒன்று நேற்று இரவு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபாவினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக முன்னாள் நிருவாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வேட்பாளர் ஏ.ஆர்.எம்.அஸீம் மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருதில் தற்போது இடம்பெறுவது அரசியல் நடவடிக்கை இல்லை. மாறாக எமதூர் மக்களின் மூன்று தசாப்த கால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி சபை தங்களுக்கு அவசியம் வேண்டும் என தேசியத்துக்கு எடுத்துக்கூறுகின்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மட்டுமேயாகும். இது எவரும் நிரந்தரமாக அரசியல் செய்வதற்கான சந்தர்ப்பமல்ல.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஆறு வட்டாரங்களையும் வென்று போனஸ் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சியுடன் கூட்டாட்சி செய்வதற்கு எமது பெரிய பள்ளிவாசல் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக சிலர் கதைகளை பரப்பி விட்டுள்ளனர். இந்த கூற்றில் எவ்வித உண்மையுமில்லை. சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை நாங்கள் ஒருபோதும் எவரிடமும் அடகு வைக்க மாட்டோம். எமது மக்கள் தனி உள்ளூராட்சி மன்றத்திற்காக தருகின்ற ஆணையைக் கொண்டு நாங்கள் நிச்சயமாக யாருக்கும் முட்டுக்கொடுக்க போக மாட்டோம் என்று உறுதியாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

சில அரசியல்வாதிகள் இருபது கோடி முதல் முப்பது கோடி ரூபா வரை எங்களிடம் பேரம்பேசுகின்றனர். அதற்கு இந்த சுயேட்சைக்குழு சோரம் போகாது. என்னை தோற்கடிப்பதற்கும் ஒருவர் கோடிக்கணக்கில் செலவிடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரச்சினைகளை உண்டாக்கி தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்த சிலர் திட்டமிடுகின்றனர். ஆனால் நாங்கள் ஜனநாயக முறையில் தேர்தலை எதிர்கொள்வோம். சண்டை என்றால் எங்களுக்கு சக்கரைப்பொங்கல். இருந்தாலும் உள்ளுராட்சி சபை என்ற இலக்கை அடைவதற்காய் பொறுமை காப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*