92 வயதில் மீண்டும் பிரதமராகிறார் மஹதீர் மொஹமட்..!

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட், பதவியிலிருந்து விலகி 15 ஆண்டுகளின் பின்னர், மீண்டும் பிரதமராகத் தெரிவாகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இவ்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மலேஷியாவின் பொதுத் தேர்தல், இவ்வாண்டு ஓகஸ்ட் 24ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இடம்பெறவுள்ளது.

தற்போதைய பிரதமர் நஜீப் ரஸாக்கின் கட்சிக்கு, அறுதிப் பெரும்பான்மை காணப்படுகின்ற போதிலும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரது செல்வாக்குக் குறைவடைந்து காணப்படுகிறது. இதனால், தேர்தலில் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

இந்நிலையிலேயே, 92 வயதான மஹதீர், எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மலேஷியாவின் 4ஆவது பிரதமராக, 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டுவரை பிரதமராகப் பதவி வகித்தார். அதன் பின்னரே, பதவியிலிருந்து விலகிச் சென்றிருந்தார்.

தற்போது, மீள்வருகையொன்றுக்காக அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது ஆட்சிக் காலத்தில், இரும்புக்கை கொண்டு ஆட்சி புரிந்த மஹதீர், நாட்டின் அரசியல் கலந்துரையாடலில், துருவப்படுத்தும் ஒருவராகக் காணப்படுகிறார். எனவே, எதிர்வரும் தேர்தல், முக்கியமானதாகக் காணப்படுகிறது.

ஆனால், இதில் முக்கியமானதாக, சிறையிலடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் சிரேஷ்ட தலைவரான அன்வர் இப்ராஹிம், அரச மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பிட்டால், தனது பதவியை அவருக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாக, மஹதீர் அறிவித்துள்ளார்.

இவர்கள் இருவருமே, அரசியல் எதிரிகளாக இருந்து, பின்னர் அரசியலில் நெருங்கிச் செயற்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். அத்தோடு, பிரதிப் பிரதமர் வேட்பாளராக, அன்வரின் மனைவியான வான் அஸிஸா வான் இஸ்மாயிலே அறிவிக்கப்பட்டுள்ளார்.

“எங்களது நேசமான நாட்டைப் பாதுகாப்பது தான், எமது முக்கியமான கவனம்” என மஹதீர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*