பூதாகரமாக மாறியுள்ள சாய்ந்தமருது உள்ளூராட்சி விவகாரம்; தீர்வு மு.கா.விடமே..!

கல்முனை மாநகர சபை தேர்தல்களம் பல வகையிலும் சூடுபிடித்து காணப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் பலத்த போட்டி நிலை காணப்படுகின்றது.

இங்கு போட்டியிடுகின்ற ஏனைய கட்சிகளில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சவால்கள் இல்லாத தேர்தல் களமாக சந்திக்கும் அதேநேரம் ஏனைய கட்சிகள் போட்டி நிலைக்கு இல்லாத நிலைக்குள் காணப்படுகிறது. கல்முனை மாநகர சபையில் போட்டியிடுகின்ற நான்கு சுயேட்சைக் குழுக்களுள் சாய்ந்தமருது முன்னிலைப்படுத்தி தோடம்பழத்தில் போட்டியிடுகின்ற சுயேட்சைக்குழு மாத்திரம் மூன்று முஸ்லிம் கட்சிகளுக்கும் ஒரு சவாலாக அமைகின்ற பாங்கு தென்படுகின்றது.

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் அமைந்திருக்கின்ற சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அல்லது அடையாளப்படுத்தும் மாதிரியில் போட்டியிடுவதென்பது துலம்பரமானது. இக்கோரிக்கை வலுப்பெறட்டும் என்ற தோரணையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டி வேட்பாளர்களை நிறுத்தாது இவ்வூர் மக்களின் உணர்வை மதித்து வழிவிட்டிருக்கின்றன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தமது போட்டித்தன்மையை இவ்வூரில் உக்கிரமாக பிரயோகித்திருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு போட்டி வேட்பாளர்களை நிறுத்தி சாய்ந்தமருது தேர்தல் களநிலவரத்தை கலவரச் சூழலாக மாற்றியிருக்கின்றது. கட்சி அரசியல் , ஜனநாயகம், பண்பாடு என்ற வகையில் இது ஒரு பொருத்தமான போட்டி நிலையென்று எடுத்துக்கொள்ள முடியும். மனிதாபிமான அடிப்படை, குறித்த மக்களின் உணர்வின் நியாயங்கள், என்பனவற்றை கருத்திலெடுத்து நோக்குகின்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை நிறுத்தாது தவிர்த்திருக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடுவதென்பது, ஒரு ஜனநாயக ரீதியான முரண்பாட்டு சிந்தனையாக நோக்கலாகாது. அதற்கு பின்வரும் காரணங்களை முன்னிறுத்தி நோக்குகின்ற போது மனுதர்மமாக அமையும்.

01. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை இம்மக்கள் முதலில் முன்வைத்தது அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம்தான் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அதனால்தான் அக்கட்சியின் தலைவர் ”சாய்ந்தமருது மக்களின் வேண்டுகோள் தனியான உள்ளூராட்சி மன்றம் என்றால் அதனை நாம் வழங்குவதற்கு தயங்கமாட்டோம்” என்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

02. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதியின் நேரடி பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த HMM. ஹரீஸ் அவர்களிடம் பேசுவதற்காக இவ்வூரை சார்ந்த அமைப்புக்கள் நேர ஒதுக்கீடு கேட்டபோது அதனை மறுத்து, நான் பள்ளிவாசலோடுதான் இது குறித்து பேசுவேன் எனச் சொல்லி சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிடம் விகிதசார தேர்தல் முறைமைக்கு மாறாக உள்ளூராட்சி தேர்தல் வட்டார முறைமையில் வருமானால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை நான் வழங்குவேன் என்ற உறுதியை வழங்கியிருந்தார்.

03. கடந்த 2015 பொதுத்தேர்தல் காலத்தில், கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து வந்து தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தனர்.

ஆகவே, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை விடயத்தில் இவ்வூர் மக்கள் பெரிதும் ஆதரித்த கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையே அதிகம் நம்பியிருந்தது என்பதை இது புலப்படுத்துகின்றது. அதன் பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸ் இந்த கோரிக்கையிலிருந்து ஒரு நழுவல் போக்கை கடைப்பிடிக்க தொடங்கிய சூழலில்தான் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா போன்றோர்கள் வந்து சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை தருவதாகவும், கல்முனையில் ஒரு உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறுமாக இருந்தால் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் தோற்றுவிக்கப்பட்ட நிலையிலேயே நடைபெறும் என்று நம்பிக்கையை வலியுறுத்திச் சென்றனர்.

இந்நிலையில்தான் சாய்ந்தமருது மக்கள் மிகவும் விழிப்படைந்து அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் கட்சிகள் என்று முஸ்லிம்களிடையே அறியப்பட்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் நிறுவுவதில் பொய்யான வாக்குறுதிகளையே வழங்குகின்றன என்பதை உணர்ந்து கொண்டு, உள்ளூராட்சி மன்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் இத்தேர்தலை பிரயோகிக்க வேண்டும் என்கின்ற முடிவுக்கு வருகின்றனர்.

இவ்வாறான தீர்மானத்திற்கு வருவதற்கு மேற்குறிப்பிட்ட மூன்று கட்சிகளுமே மூலகாரணமாக அமைந்திருந்தன என்பதிலிருந்து அக்கட்சிகள் விடுபட முடியாது. அவர்களின் தவறுகளை உணர்ந்து இம்மக்களின் உணர்வை அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் கள போட்டி வேட்பாளர்களை தவிர்த்து பிராயச்சித்தத்தை தேடிக்கொண்டனர். அதற்காக வேண்டி அவ்விரு கட்சிகளும் சாய்ந்தமருது மக்களுக்கு இழைத்திருக்கின்ற வரலாற்றுத் துரோகத்தை இம்மக்கள் மன்னிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டிய கடப்பாடும் அவர்களுக்குண்டு.

இதற்கப்பால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையில் இழைத்த அநீதிக்கு பட்சதாபப்படாமல் தீவிர போட்டி களநிலவரமாக மாற்றுவதற்கு துணிந்திருப்பது இவ்வூர் மக்கள் இக்கட்சிக்கு காட்டிவந்த விசுவாசத்தை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது எமது கட்சியின் கட்டளைக்கு சாய்ந்தமருது மக்கள் அடிபணிய வேண்டுமென்கின்ற ஆணவத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட வேண்டியிருக்கின்றது.

உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் மாபெரும் துரோகத்தை இழைத்துக்கொண்டு அவ்வாறு நாம் இல்லை என்பதுபோல் தம்மை சுத்தப்படுத்தும் வகையிலும் இம்மக்களையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் மாதிரியிலும் தமது பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். அதற்கு மாபெரும் சான்றாக பின்வரும் செய்தியை ஆதாரப்படுத்த முடியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை மருதமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

”சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில், கரைவாகு வடக்கு பிரதேச சபை அதே எல்லைகளுடன் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கரைவாகு மேற்கு பிரதேச சபை அமையவேண்டிய தேவைப்பாடு தமிழர்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. இதனால் நற்பிட்டிமுனை மக்கள் அனாதரவாக விடப்பட்டு இன்னுமொரு பிரதேச சபைக்குள் உள்வாங்கப்படக்கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எங்கிருந்து எல்லைகள் போடலாம், கல்முனை மாநகரை எப்படி காப்பற்றலாம் என்றெல்லாம் நாங்கள் சிந்திக்கவேண்டியுள்ளது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை நாங்கள் அழைத்துப் பேசுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம். நீண்டகாலமாக இருக்கின்ற இந்தப் பிரச்சினைக்கு ஒரேநாளில் தீர்வுகாணவேண்டுமென சிலர் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் கட்சி பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டு, பல உத்தரவாதங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படி கொடுத்த உத்தரவாதங்களை, இதய சுத்தியுடன் நிறைவேற்ற முற்படுகின்றபோது எதிர்பாராதவிதமாக எதிர்ப்புகள் கிளம்புகின்றன. சில மாற்றுக் கட்சிக்காரர்கள் இதன் பின்னாலிருந்து குளிர்காய முற்படுகின்றனர். கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில், பள்ளிவாசலுடன் இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தி, எங்களால் இதனை தீர்த்துதர முடியும் என்ற பாங்கில் அவர்கள் செயற்படுகின்றனர்.

இன மற்றும் பிரதேச நல்லுறவுக்கு குந்தகமில்லாத வகையில், நாங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும். இதனை தீர்ப்பத்தில் இருக்கின்ற சிக்கல்கள் காரணமாக தாமதங்கள் ஏற்படுகின்றன. இதுவிடயத்தில் கல்முனை மக்கள் ஏற்படுத்திய பிரச்சினையால் ஏற்பட்டுள்ள சிக்கல் எப்படியாவது தீர்க்கப்பட வேண்டும். இதற்கான முயற்சியை நாங்கள் இதயசுத்தியுடன் மேற்கொண்டு வருகிறோம். பொறுமையில்லாமல் இந்த விடயங்களை நாங்கள் கையாள முடியாது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில், முஸ்லிம் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்காகவே இதனை பெரிய பூதாகரமாக்கி, முஸ்லிம் காங்கிரஸுக்கு வேலி கட்டிக்கொண்டு அரசியல் செய்வதற்கு சில சக்திகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இந்த வேலிகளை உடைத்துக்கொண்டு சாய்ந்தமருது மண்ணில் எமது வெற்றியை உறுதிப்படுத்துவோம்.”
நன்றி : விடிவெள்ளி (16.01.2018)

01. மேற்படிக்கூற்றில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பல முரண்பாடான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். அதிலும் குறிப்பாக சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றார் என்பதை அவரே ஒப்புக்கொள்வதை இதில் காண முடியும். ”கடந்த காலங்களில் கட்சி பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டு, பல உத்தரவாதங்களை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது” . இந்த வாசகம் இதனை மிக தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் சாத்தியமற்ற ஒரு கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் முன்வைக்கின்றனர் எனில், அதன் பாதகங்களை தெளிவாக அந்த மக்களுக்கு உணர்த்தி இதனை நாங்கள் செய்துதர முடியாது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய கடப்பாடு எல்லா கட்சிகளிலும் பார்க்கிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கிறது.

ஏனெனில், அவர்களின் யாப்பின் பிரகாரம் அல்குர்ஆன் , அல்ஹதீஸ் என்ற அடிப்படையை கொண்டதாகும். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவது இஸ்லாத்தின் பார்வையில் நயவஞ்சகர்களின் அடையாளமாக குறிப்பிடப்படுகின்றது. ஆயின் இக்கட்சி இதிலிருந்து தம்மை விடுவித்து சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் எந்தவகையில் சாத்தியமற்றது என்பதை மட்டுமே பேசியிருக்க வேண்டும். இதனை தவிர்த்து நிர்பந்தத்தால் வாக்குறுதியளித்தோம் என்று குறிப்பிடுவது முறையல்ல.

02. சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரச்சினையை ஒரேநாளில் தீர்க்க முடியாது என்று இன்று குறிப்பிடுவதென்பது பொருத்தமான கூற்றாக ஏற்க முடியாது. கடந்த காலங்கள் எதுவானாலும் இறுதியாக நடைபெற்ற 2015 பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்ட காலத்திலிருந்து நடைபெறப்போகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரகடன காலம் வரைக்குமான நாட்களை கணக்கிட்டுப்பார்த்தால்கூட ஏறத்தாள இரண்டு வருடங்கள் உருண்டோடி இருக்கின்றது. அப்படியென்றால், ஒரேநாளில் என்று இன்று பேசுவது பொருத்தமற்றதாகும்.

நாம் உதாரணமாக சுட்டிக்காட்டிய இரண்டு வருடக்காலத்தை முஸ்லிம் காங்கிரஸ் விரும்புகின்ற முறையின்படி கல்முனை பிரச்சினையை தீர்ப்பதற்கு பயன்படுத்தாது காலதாமதங்களை ஏற்படுத்திவிட்டு இத்தேர்தலின் போதுதான் சாய்ந்தமருது மக்கள் இக்கோரிக்கையை முன்வைப்பதுபோல் காண்பித்து தங்களின் அபத்தங்களையும் கபட நாடகங்களையும், அரங்கேற்ற முன்பவருவதென்பது அறிவுக்கு புறம்பான செயல் மட்டுமன்றி மனிதாபிமானத்தையும் கொச்சைப்படுத்துகின்ற ஒரு தொழிற்பாடாகவே எம்மை பார்க்க வைக்கின்றது.

ஒரே நாளில் கல்முனை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்று கூறுவதைப் பார்க்கிலும் எதிர்வரும் பெப்ரவரி 10 2018 ஆம் நாள் முடிவை தந்து தீர்க்கும் நாளாக மாற்ற முடியும். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் வழியமைக்க முடியும் என்பதையும் நன்கு சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம். புரிவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

03. சாய்ந்தமருது மக்கள் கேட்ட உள்ளூராட்சி பிரச்சினையை ஏனைய மக்களின் கருத்துக்களோடு பிணைத்து எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு நாளில் இப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவர முடியாது என்று சொல்வதின் ஊடாக இம்மக்கள் முன்வைத்த கோரிக்கையோடு சம்பந்தப்படாத காரண காரியங்களை இப்போது இணைத்துப் பேசுவதற்கு மு.கா. தலைவர் முற்படுவது அவரது கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கு ஒரு தந்திரோபாயமான நகர்வென்பதை மிக எளிதாக யாரும் புரிந்துகொள்ள முடியும்.

04. கரைவாகு வடக்கு பிரதேச சபை அதே எல்லைகளுடன் வழங்கப்பட வேண்டும் மற்றும் கரைவாகு மேற்கு பிரதேச சபை தமிழர்களுக்காக அமைய வேண்டும் இதற்குள் நற்பட்டிமுனை முஸ்லிம் மக்கள் கைவிடப்படும் ஆபத்தும் காணப்படுகின்றது என்று ஒரு நியாயத்தை இந்த தேர்தல் காலத்தில் மு.கா. தலைவர் முன்வைக்கின்றார்.

அப்படியென்றால் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையை மு.காவிடம் இம்மக்கள் முன்வைத்த ஆரம்பக்காலத்திலேயே சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லாமல் அவர்கள் தவிர்த்ததற்கான காரணத்தை அவர்கள் எந்த இடத்திலும் முன்வைக்கவில்லை. மாறாக சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நிலையில்தான் கல்முனை மாநகர சபை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் தரப்புக்களினால்தான் முன்வைக்கப்படுகின்றது. அப்போதுதான் நான்காக பிரித்தால் எங்களுக்கும் ஒரு சபை அமைய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் முன்வைக்கின்றனர். ஆயின் தமிழர்களுக்கான சபை ஒன்று ஏற்படுத்தப்படுதல் என்பதும் அதற்குள் நற்பிட்டிமுனை முஸ்லிம்கள் உள்வாங்கப்படுவார்களா என்ற பிரச்சினைகளெல்லாம் தோன்றுகின்றது.

உள்ளூராட்சி மன்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றபோது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட சபையினுள் தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளடங்குவதும் அதேபோல், தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம்கள் ,சிங்களவர்கள் உள்ளடங்குவதும் மற்றும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட உள்ளூராட்சி மன்றங்களில் சிங்களவர்களும் தமிழர்களும் உள்ளடங்குவதும் நம் நாட்டில் இயல்பாக காணப்படுகின்ற ஒரு அம்சமாகும்.

இதற்கு நல்லதொரு உதாரணமாக நமது கல்முனை மாநகரசபையை அடுத்து காணப்படுகின்ற காரைதீவு பிரதேச சபையை எடுத்துக்கொள்ள முடியும். அச்சபை தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட்தாகும். அதற்குள் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு ஆகிய இரண்டு முஸ்லிம் பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

உண்மையில் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிக்க வேண்டும் என்ற சிந்தனையை வெளிப்படுத்திய போதுதான் இன்று இவர்கள் குறிப்பிடுகின்ற சிக்கல்கள் தோன்றுகின்றதென்றால் அந்த கருத்தை தோற்றுவித்தவர்களுள் இன்று முஸ்லிம் காங்கிரஸும் அடங்கியிருக்கின்றனர். அவர்கள்தான் அதற்கான தீர்வை தேட வேண்டும்.

அந்த வகையில் ஏற்கனவே சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்காக போடப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றத்தை நிறுவி விட்டு, கல்முனை பிரதேச செயலகத்தை மையமாக கொண்டு ஏனைய பிரதேசங்களை மூன்றாக எவ்வாறு பிரிப்பதென்பதற்கு ஓர் ஆணைக்குழுவை போடுவது குறித்து சிந்தித்திருக்க வேண்டுமேயன்றி மாறாக கல்முனை, சாய்ந்தமருது ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களை வைத்து நான்காக பிரிப்பது தொடர்பில் முற்பட்டிருக்க வேண்டியதன் தேவை இல்லை என்பதையும் இதில் நாம் உணர வேண்டும்.

05. எனவே, முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு பிழைகள் செய்துவிட்டு மாற்று கட்சிகள் அரசியல் செய்ய முற்படுகின்றது என்று குற்றம் சாட்டுவதற்கு முன்னர் அதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்தவர்கள் அவர்களே என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணர வேண்டிய தேவை இருக்கின்றது.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் சாய்ந்தமருதிற்கான உள்ளூராட்சி சபை வழங்கப்பட கூடாது என்பதற்கு சொல்லப்படுகின்ற ஒரே ஒரு காரணம் சாய்ந்தமருது கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து சென்றால் கல்முனை மாநகர சபையின் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு சென்றுவிடும் என்பதாகும். இதனை இன்று இருக்கின்ற பிரதான மூன்று முஸ்லிம் கட்சிகளும் பெரும் தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியனவைகளும் இதனை ஏற்றிருப்பது போன்ற ஒரு நிலை இன்று காணப்படுகின்றது.

இந்த வாதம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்கும் அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதை அச்சொட்டாக நிரூபிக்கப்படுவதன் ஊடாக கல்முனையில் எழுந்திருக்கின்ற பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கு இசைவாக இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மட்டுமே வழிகாட்ட முடியும்.

அந்த தீர்வை சரியாக அடையாளப்படுத்துவதற்காக வேண்டியேனும் சாய்ந்தமருது மக்களின் தேர்தல் களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூராமாகி விலகி நின்று சுமூகமான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமது கட்சி வேட்பாளர்களை சாய்ந்தமருதின் செயற்பாட்டிலிருந்து இடைநிறுத்துவதற்கு முன்வரல் வேண்டும். அதன் ஊடாகவே அவர்களின் அதாவது, தமிழர்களிடம் ஆட்சி சென்றுவிடும் என்ற பயம் தெளிவடையும். அதேநேரம் சாய்ந்தமருது மக்களும் அதன் பின்னர் தனி உள்ளூராட்சி மன்றத்தை கோருவதில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்து மௌனிக்கும் நிலை தோன்றும். இந்தத் தீர்வை உருவாக்குவது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் சிந்திப்பதுதான் அவர்களின் பொறுப்புடன் கூடிய செயற்பாடாகும்.

எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது -05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*