சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு; நிச்சயம் நிறைவேற்றுவேன் என்கிறார் அமைச்சர் பைசர்

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை பணித்துள்ளார். நிச்சயமாக அதனை நிறைவேற்றி தருவேன் என உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது பேர்ல்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம், லீடர் அஷ்ரப் இளைஞர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.எம்.ஜமால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது;

“இப்பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோர் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி, உங்களையும் என்னையும் ஏமாற்றியுள்ளனர். இங்கு உங்களுக்கு ஒரு வாக்குறுதியை தந்து விட்டு, என்னிடம் வந்து இன்னொன்றை கூறுவார்கள். இவர்கள் உண்மைக்கு உண்மையாக செயற்பட்டிருந்தால் சாய்ந்தமருத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை எப்போதோ ஏற்படுத்தி தந்திருப்பேன். இந்த விடயம் நிறைவேற்றப்படாமல் போனமைக்கு நான் மிகவும் வேதனையடைகின்றேன்.

இந்த மண்ணுக்கு வந்து பிரதமர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தேன். நானும் இங்கு வந்து வாக்குறுதியளித்திருந்தேன். அதனால் இவ்விடயத்தை கட்டாயம் நிறைவேற்றி தர வேண்டும் என்ற பொறுப்புடன் செயற்பட்டேன். ஆனால் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்ததால் சாய்ந்தமருத்துக்கு தனியாக உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்க நான் எடுத்த நடவடிக்கை தடைப்பட்டது.

சாய்ந்தமருதை மட்டும் தனியாக பிரித்தால் சிக்கல் ஏற்படும் என்று என்னை எச்சரித்தார்கள். தற்போது கல்முனையில் 80 வீதமாக இருக்கின்ற முஸ்லிம்களின் தொகை சாய்ந்தமருது தனியாக பிரியும்போது 60 வீதமாக குறைவடையும் என்றும் அதனால் நமது சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்கள். இந்த பிரதேசத்தில் பல தலைவர்கள் இருப்பதால் அவர்கள் ஒற்றுமைப்பட்டு இருக்கப்போவதில்லை என்றும் அதனால் கல்முனை மாநகர சபை விடயத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

நான் என்ன செய்வேன். கொழும்பில் வாழ்கின்ற எனக்கு இப்பகுதியை பற்றி எதுவும் தெரியாது. உங்கள் பிரதிநிதிகள் சொல்வதையே நான் கேட்க வேண்டியிருந்தது. உங்களுக்கு உள்ளூராட்சி மன்றம் பெற்று தருவோம் என்று இங்கு வாக்குறுதியளித்து விட்டு, என்னிடம் வந்து அதனை செய்து கொடுக்க வேண்டாம் என்று வற்புறுத்தினார்கள்.

சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்கள் மத்தியில் பிணக்கை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. இந்த மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஹக்கீமும் றிஷாட்டும் ஒன்றாக இணைந்து கூறினால் சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்குவதாக நான் கூறியிருந்தேன். அவர்கள் உடன்பட்டு வரவில்லை.

கல்முனையை நான்காக பிரிப்பதென்பது இலகுவான விடயமல்ல. அதற்கு எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தமிழர்களுடனும் பேச வேண்டும். எவ்வாறாயினும் நானகாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதால் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நான் ஆலோசித்து விட்டு தமிழ் சமூகத்தின் தலைமையான சம்பந்தனுடனும் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன் பின்னர் தமிழ்- முஸ்லிம் தலைமைகள் பேசி முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொண்டேன். இன்னும் முடிவில்லை.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் இன்றும் கூட இங்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் பேசினேன். அவர் கட்டாயம் சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளூராட்சி மன்றத்தை வழங்குமாறு என்னை பணித்துள்ளார். நானும் இங்கு வந்து வாக்குறுதியளித்தவன் என்ற ரீதியில் ஜனாதிபதியின் உத்தரவை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். அதில் எவரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

நான் இங்கு வந்தது அரசியல் செய்வதற்க்காக அல்ல. எங்கள் கட்சிக்கு வாக்கு கேட்கவும் அல்ல. எனது நிலைப்பாட்டையும் ஜனாதிபதியின் செய்தியையும் சொல்லவே உங்கள் முன் வந்துள்ளேன். நான் அரசியல் செய்வது இறைவனுக்காக மட்டுமே. நான் யாருக்கும் பயப்படுபவன் இல்லை. இங்கு எனது வருகைக்கு தடை போட முயற்சிக்கப்பட்டது. மண்டபம் வழங்க வேண்டாம் என அச்சுறுத்தப்பட்டுள்ளது. அளுத்கம, கிரன்ட்பாஸ் சம்பவங்கள் இடம்பெற்றபோது சமூக நோக்கில தனியாக முன்னின்று எதிர்கொண்ட நான் எவருக்கும் அஞ்சி ஓடி ஒழிய மாட்டேன்.

உங்களை ஏமாற்றிய அரசியல் தலைமைகளை உங்களின் வாக்குகளின் மூலம் துரத்தியடியுங்கள். இந்த தேர்தலில் அவர்களை நிராகரித்து, ஊரின் ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். அவர்களுக்கு இம்முறை சரியான பாடம் புகட்டுங்கள். இனியும் ஏமாற்று அரசியலுக்கு இடமளியாதீர்கள். கையாலோ கல்லாலோ அல்லாமல் வாக்குகள் மூலம் அவர்களை விரட்டியடியுங்கள்” என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் உரைக்கு முன்னதாக சாய்ந்தமருது மக்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட், லீடர் அஷ்ரப் இளைஞர் கழகத்தின் தலைவர் ஏ.எம்.எம்.றிபாஸ் ஆகியோர் தெளிவுபடுத்தி உரையாற்றினர்.

Live telecast Video

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் பங்கேற்புடன் சாய்ந்தமருதில் இடம்பெறும் கூட்டம்..Live telecast

Posted by Metro Mirror on Thursday, January 18, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*