பிரபாகரனை சந்திக்க என்னை பலாத்காரமாக தூக்கிச் சென்றே ஹெலிகொப்டரில் ஏற்றினார்கள்..!

* அஷ்ரப் திட்டமிட்டே கொலை செய்யப்[பட்டிருக்கிறார் என்ற மர்மம் துலங்கி வருகிறது..!

* எமது சாபம் ரணிலுக்கு பலித்து விட்டது..!

* பிரபாகரனின் கழுத்தை அறுப்பது போன்றே நிய்யத் செய்து மக்காவில் குர்பானிக்காக ஆட்டை அறுத்தார் அஷ்ரப்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

“எமது தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் விபத்தில் மரணிக்கவில்லை. அவர் திட்டமிட்டே கொலை செய்யப்[பட்டிருக்கிறார் என்கின்ற மர்மம் தற்போது துலங்கி வருகிறது” என தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

“உலகில் மிகப்பெரிய திருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ற விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாள் வீச்சில் அவர் இன்று அகப்பட்டிருக்கிறார். அதனால் ரணில் விரைவில் பிரதமர் பதவியை இழப்பார்” எனவும் அதாஉல்லா குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து கல்முனைக்குடியில் நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு முஸ்லிம்களின் விரோதி என அன்று எமது மறைந்த தலைவர் அஷ்ரப் பிரகடனம் செய்திருந்தார். அவர் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவை அங்கீகரித்ததில்லை. ரணில் சாரதியாக இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி எனும் பஸ்ஸில் எற மாட்டோம் என அஷ்ரப் சபதமிட்டிருந்தார். அந்தளவுக்கு முஸ்லிம் விரோத போக்குடையவர்தான் ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் நானும் அவருக்கு தொடர்ச்சியாக ஏசிப்பேசி வருகின்றேன்.

நாம் எல்லோரும் முஸ்லிம் காங்கிரசில் இருக்கும்போது இந்த விடயத்தில்தான் ரவூப் ஹக்கீமுக்கு எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. ரணில் ஒழிய வேண்டும் என்று அஷ்ரப் சொல்லியிருந்தார். ஆனால் கண்டியில் இருந்து வந்த ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் ரணிலை பலப்படுத்த வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அஷ்ரப் அங்கீகரிக்கவில்லை. அவரை பாஷிஷப்புலி என்றே அஷ்ரப் வர்ணித்தார். பிரபாகரனின் கழுத்தை அறுப்பது போன்றே நிய்யத் செய்து மக்காவில் குர்பானிக்காக ஆட்டை அறுத்தேன் என்று அஷ்ரப் நாடாளுமன்றத்தில் மிகத் துணிச்சலாக உரையாற்றியிருந்ததை எவரும் மறந்து விட முடியாது.

அப்படிப்பட்ட பிரபாகரனை ரவூப் ஹக்கீம் சந்திக்க விரும்பி என்னையும் அழைத்தார். நான் அதற்கு உடன்படவில்லை. பிரபாகரனை சந்திக்க கூடாது என்று விடாப்பிடியாக நின்றேன். ஆனால் என்னை பலாத்காரமாக தூக்கிச் சென்றே ஹெலிகொப்டரில் ஏற்றினார்கள்.

அஷ்ரப் அங்கீகாரம் வழங்காமல் சபித்திருந்த ரணிலையும் பிரபாகரனையும் ரவூப் ஹக்கீம் தலையில் தூக்கி வைத்து ஆடினார். இன்றும் ஹக்கீம் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். அதனால்தான் நமது தனித்துவமான கட்சியை குழிதோண்டிப் புதைத்து விட்டு, யானையில் களமிறங்கியுள்ளார்.

அந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி மரணிக்கவில்லை. அவர் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற மர்மம் இன்று துலங்கி வருகிறது. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற உண்மை வெளிவராமல் போகாது.

அஷ்ரப் உயிருடன் இருக்கும் வரை இந்நாட்டில் கால்பதிக்க முடியாது என ரணிலும் பிரபாகரனும் மேற்குலக சக்திகளும் நன்றாக அறிந்து வைத்திருந்தனர். இன்று ரணிலின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. உலகில் மிகப்பெரிய திருடன் ரணில் விக்கிரமசிங்க என்ற விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாள் வீச்சில் அவர் இன்று அகப்பட்டிருக்கிறார். அதனால் விரைவில் ரணில் பிரதமர் பதவியை இழப்பார். அவர் மீது அஷ்ரபும் நானும் இட்டு வந்த சாபம் பலித்து விட்டது. அவர் முஸ்லிம்களுக்கு மட்டும் விரோதியல்ல. முழு நாட்டுக்குமே துரோகியென்ற உண்மை இன்று வெளிப்பட்டுள்ளது.

அதனால் ரணிலையும் ரவூப் ஹக்கீமையும் முஸ்லிம்கள் இத்தேர்தலில் நிராகரிக்க வேண்டும். அதற்காக வன்னியில் இருந்து வந்திருக்கின்ற ரிஷாத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்களா? ஹக்கீம் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறாரோ அதுபோலவே றிஷாத்தும் செய்து கொண்டிருக்கிறார்.

ரவூப் ஹக்கீம் யார் என்று அறிந்து கொள்வதற்கு ஹசன் அலி போன்றவர்களுக்கு 17 வருடங்கள் சென்றிருக்கிறது. அப்படியென்றால் ரிஷாத்தை அறிந்து கொள்வதற்கு இவர்களுக்கு இன்னும் எத்தனை வருடங்கள் போகப்போகிறதோ தெரியாது. அதனால் ஹசன் அலிக்கு ஒரு பால் போத்தலும் சூப்பியும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

கல்முனை மண்ணில் பிறந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் உண்மைகளை புரிந்து கொண்டாலும் ரவூப் ஹக்கீமின் வலைக்குள் அகப்பட்டிருப்பதால் அவரால் சமூக ரீதியாக சிந்தித்து செயற்பட முடியாது என்பதை மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*