அலி அஹமட் மௌலவியின் மோட்டார் சைக்கிள் உடைப்பு; சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பலத்த கண்டனம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்)

மௌலவி அல்ஹாபில் ஏ.ஏ.அலி அஹமட் ரஷாதியின் மோட்டார் சைக்கிள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் வன்மையாக கண்டித்துள்ளது.

இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜூம்ஆப் பேருரையின் போது ‘இஸ்லாம் கூறும் அரசியலும், சமூக ஒற்றுமையும்’ எனும் தொனிப்பொருளில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி முறைமைகளையும் பிர்அவ்னின் கொடுங்கோல் ஆட்சியினையும் ஆதாரங்களாக முன்வைத்து குத்பா பிரசங்கம் செய்த சர்வதேச புகழ்பெற்ற மார்க்க அறிஞரான மௌலவி அல்ஹாபீல் ஏ.ஏ.அலி அஹமட் ரஷாதி அவர்களின் மோட்டார் சைக்கிள் சில தினங்களுக்கு முன்னர் அவரது சாய்ந்தமருது இல்லத்தின் முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சில அரசியல் கைக்கூலிகளினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது நாகரிகமற்ற, மனிதாபினமற்ற, வெட்கக்கேடான இழிசெயலாகும். அது மாத்திரமல்லாமல் இஸ்லாத்தை போதிக்கும், எம்மக்களால் மதிக்கப்படும் உலமா பெருந்தகைகளுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.

உலகுக்கு மனித நாகரீகத்தையும் ஒழுக்கத்தையும் காட்டித்தந்த எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் போதனைகளை எம்மக்களுக்கு போதிக்கும் உலமாக்களின் குரல்வளைகளை நசுக்க முற்படும் இச்செயலை அனைவரும் கட்சி பேதமின்றி கண்டிக்க முன்வர வேண்டும்.

ஏனெனில், நவீன உலகில் இஸ்லாத்தை ஓங்க வைப்பதில் உலமாக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் காரணமாக உலமாக்கள் பின்வாங்குவார்களேயாயின் எமது எதிர்கால இளம் சந்ததியினர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். இஸ்லாத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தூரம் அதிகமாகி விடும்.

எனவே இச்சம்பவத்தை மேற்கொண்டவர்களையும் அதனை செய்ய தூண்டியவர்களையும் பள்ளிவாசல் நிர்வாகம் வன்மையாக கண்டிப்பதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது பொலிஸார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*