உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை சாய்ந்தமருதுக்கே மேயர் பதவி; மாநகர சபையின் பெயரும் மாற்றப்படும்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதேவேளை சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படும் வரை கல்முனை மாநகர சபையின் பெயரை “கல்முனை-சாய்ந்தமருது மாநகரம்” என மாற்றி பெயரிடுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார்.

சாய்ந்தமருது பெளசி மைதானத்தில் இன்று நடைபெற்‌ற “மாண்புறும் சாய்ந்தமருது” எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் நடவடிக்கை குழுவின் தலைவரும் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்னாள் உப தலைவருமான ஏ.எல்.எம்.ரஷீத் புர்கான் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கட்சியின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், பாரளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், சாய்ந்தமருது வேட்பாளர்களான எம்.ஐ.எம்.பிர்தெளஸ், ஏ.ஏ.பசீர், ஏ.சி யஹியாகான், ஏ.ஏ.நசார்டீன், எம்.எம்.பாமி, ஏ.எம்.முபாறக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கு அஷ்ரப் மறுப்பு..!

“கல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு நான் தயாராகிக்கொண்டிருக்கிறேன். அதில் 200 மில்லியன் ரூபாவை எடுத்து, சாய்ந்தமருது பிரதேச சபைக்கான கட்டிடத்தை பொது நூலக வளாகத்தில் அமைக்கவுள்ளேன். இந்த வேலைத்திட்டங்களை இந்த வருடமே நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் தர முடியாது என மறைந்த தலைவர் அஷ்ரப் மறுத்திருந்தார். நான் அத்தனையும் மீறி சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தேன். அந்த வாக்குறுதியை என்றைக்கும் நான் மறந்து செயற்பட்டதில்லை.

எந்த பிரதேசத்துக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வு; அதுவரை பொறுங்கள்..!

இடைநடுவில் நெருக்கடிகள் ஏற்பட்டபோது, சாய்ந்தமருது சார்பில் பள்ளிவாசல் நிர்வாகம் எங்களுடன் கதைத்தது. சாய்ந்தமருதிலுள்ள கட்சி முக்கியஸ்தர்கள் என்னிடம் வந்து பாரிய அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தனர். சாய்ந்தமருதுக்கு நான் கொடுத்த வாக்குறுதியில் ஒரு துளியேனும் நான் மாறவில்லை என்பதை சொல்லியாக வேண்டும். ஆனால் எந்த பிரதேசத்துக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வைக் கொடுக்கும் வரை சாய்ந்தமருது மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.

மர்ஹூம் அஷ்ரஃபின் மரணத்தின் பின் இணைத் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் வழங்கப்பட்டதை கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான கூட்டத்துக்கு புர்கான் தலைமையில் என்னை அழைத்து கட்சியின் ஏக தலைவனாக பிரகடனப்படுத்தியது இந்த மண். சாய்ந்தமருது மண் எனக்கு மகுடம் சூட்டி இந்தக் கட்சியை பாதுகாத்த மண்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் தவறு எங்கு நடந்திருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். தவறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலா, அல்லது பள்ளி தலைமையிலா, அல்லது ஏனைய அமைச்சர்கள் பொறுப்பாளர்களா, அல்லது எமது பிரதியமைச்சர் பொறுப்பாளரா என்று இந்தப் பிரச்சினையை வெவ்வேறு கோணங்களில் பார்க்கலாம். ஆனால், ஒவ்வொரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையைப் பார்ப்பவர்கள் தங்களது சொந்த அரசியலை வைத்து இதற்கு வியாக்கியானம் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஜெமீல் பிரேரணை கொண்டு வந்தார்; ஜவாத் வழக்கு தொடர்வேன் என்றார்..!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பான பிரேரணையை கொண்டு வந்தபோது அங்கு உரையாற்றிய கல்முனையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத், எந்தக் காரணம்கொண்டும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்க விட மாட்டேன். அவ்வாறு வழங்கினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என்று கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியையும் மீறிப் பேசினார். இப்போது அவர் மயில் கட்சியிடம் போய் சரணடைந்திருக்கிறார்.

உள்ளூராட்சி மன்ற வியடத்தில் கட்சியை அழிப்பதற்கான சதி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல சாய்ந்தமருதிலும், கல்முனையிலும் இப்படியான பிணாமிகள் இருந்து கொண்டிருக்கின்‌றனர். மர்ஹூம் அஷ்ரஃப் கல்முனையில் அசைக்க முடியாத இயக்‌கமாக முஸ்லிம் காங்கிரஸை நிலைநிறுத்தியிருக்கிறார். அப்படியான கட்சியை எந்த பிணாமிகள் வந்தாலும் அழிக்க முடியாது.

இரு துருவங்கள் இணைந்து கட்சியை அழிக்க தீவிரம்..!

எமது கட்சியில் இரு துருவங்களாக இருந்த ஜெமீலும் சிராசும் கட்சியை விட்டு வெளியேறி இன்றும் ஒரே கட்சியில் இரு துருவங்களாக இருந்து கொண்டு அவர்கள் இருவரும் இந்த மண்ணில் இந்த இயக்கத்தை அழிப்பதற்காக தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் தருவோம், பிரதேச சபை தரமாட்டோம் என்று மறைந்த தலைவர் அஷ்ரஃப் சொல்லியிருந்தார். கல்முனை மாநகரை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படிச் சொன்னார். அவரது பேச்சையும் மீறி நாங்கள் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து விட்டோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை மாற்ற முடியாது. கட்சித் தலைமை கொடுத்த இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.

புதிய தேர்தல் முறையினால் கல்முனை மாநகருக்கு ஆபத்து என்பதை காரணம்காட்டி சாய்ந்தமருதை பிரிப்பதை கல்முனை மக்கள் எதிர்த்தனர். சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் இப்போதைக்கு வேண்டாம். ஆனால், தேர்தலுக்கு முன்னர் அறிவியுங்கள். அந்த தேர்தலில் கல்முனை மக்கள் கூறுவது சரியா, பிழையா என்று பார்ப்போம் என்றுதான் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் சொன்னது. இந்த தேர்தலில் ஒன்றாக வாக்களித்து எங்களது ஆசனங்கள் இல்லாமல் ஆட்சியமைக்க போதுமானது என்பதை நிரூபிப்போம் என்று கூறினார்கள்.

கல்முனையை நான்காக பிரிப்பது பெரிய விபரீதம்..!

ஆனால், அதற்கிடையில் அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த விடயத்தை வேண்டுமென்றே குழப்பியடித்து விட்டார். இதனால்தான் கல்முனை நான்காக பிரிக்கபட வேண்டும் என்கிற பெரிய விபரீதம் ஏற்பட்டது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கதைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. இந்த விடயத்தில் என்ன நடக்கப்போகும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். விடயத்தை சிக்கலாக்கி என்னை நெருக்கடிக்கள் மாட்டப் போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் இந்த விடயத்தில் கொஞ்சம் நிதானமாக நடந்திருக்க வேண்டும். தனியான உள்ளூராட்சி மன்றத்தை மு.கா.தலைவர் பெற்றுத்தருவதாக சொல்கிறார். அவரது பேச்சை நம்பி, கல்முனைக்கு பாதிப்பு வராது என்பதை தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எங்களுக்கு வாக்களித்து, புதிய தேர்தல் முறையில் பாதிப்பு வராது என்பதை ஆசன வித்தியாசத்தில் நிரூபித்துக்காட்ட பொறுமையோடு இருந்திருக்கலாம்.

தோடம்பழத்தை கொண்டுவந்து இந்த கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை பள்ளிவாசல் நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அறிவில்லாதவர்களால், தூரநோக்க சிந்தனையற்றவர்கள் இன்று மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். சாய்ந்தமருதிலுள்ள இளைஞர்களையும் வாக்கு இல்லாத பிள்ளைகளையும் தவறான முறையில் வழிநடத்துகின்றனர். பொறுமை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் இன்று வன்முறைக் கலாசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாய்ந்தமருதில் நெருக்கடி; கல்முனையில் பித்தலாட்டம்; கட்சியை கருவறுப்பு..!

கல்முனையிலிருந்து வந்தவர்களில் ஜவாத் மற்றும் அவரது சகோதரர்கள் நடந்து கொண்ட விடயம்- இது திட்டமிடப்பட்ட ஒரு சதி என்பதை எடுத்துக்காட்டியது. ஒரு பக்கத்தில் சாய்ந்தமருதில் நெருக்கடி மறுபக்கம் கல்முனையில் என்று ஆரம்பித்த இந்த பித்தலாட்டத்தின் விளைவு இன்று கட்சியை கருவறுக்கின்ற சூழலுக்கு இட்டுத்தள்ளியிருக்கின்றது. இதற்கு தலைமை ஒருபோதும் பொறுப்பாகாது. சந்தர்ப்பவாத அரசியலுக்காக இதனை பயன்படுத்துகின்றனர்.

பேரினவாதத்துக்கும், பிரதேசவாதத்துக்கும் எதிராக இந்தக் கட்சி போராடி வருகிறது. பிரதேசவாதம் சாய்ந்தமருதில் இருந்தாலும் சரி, கல்முனையில் இருந்தாலம் சரி, அது துடைத்தெறியப்பட வேண்டும் என்பதில் தலைமை தெளிவாக இருக்கிறது. எனக்கு மகுடம் சூட்டிய இந்த சாய்ந்தமருது மண்ணுடனான உறவை எந்த பிணாமிகளாலும் அழிக்கமுடியாது.

கல்முனை மாநகர சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸின் கரங்களில் தருவதற்கு சாய்ந்தமருது மக்கள் வகை செய்வார்கள். இந்த ஆட்சியை வழிநடத்தும் பொறுப்பை சாய்ந்தமருதில் தெரிவாகும் மேயரின் கரங்களில் ஒப்படைப்போம்.

சாய்ந்தமருது தோணாவை சுற்றி பூங்கா அமைப்பதற்கு ஆரம்பித்து விட்டோம். வொலிவேரியன் கிராமத்தை அழகுபடுத்த ஆரம்பிக்கவுள்ளோம். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு குழுவினர் வந்து, நீரியல் திட்டத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள். தேர்தல் முடிந்த கையோடு கல்முனை மாநகரிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களையும் நாங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துகாட்டப் போகிறோம்.

ஜெமீல்தான் சூத்திரதாரி..!

சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முடியாது என்பதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தவறிழைத்து விட்டது என்று மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர். ஜெமீல்தான் இதன் சூத்திரதாரி என்பதை நாம் அறியாமலில்லை. இந்த நெருக்கடியான சூழலுக்குள் தீர்வு காண்பதற்கு, சற்று பொறுமையாக இருக்குமாறு நான் சொல்லியும் கேட்காமல் நடத்திக்கொண்டிருக்கும் விபரீத விளையாட்டிலிருந்து சாய்ந்தமருது மண் தனிமைப்படுத்தப்படமால் பாதுகாக்கப்பட வேண்டும்.

கடந்த தேர்தலில் எங்களுக்கு சாய்ந்தமருதில் வழங்கப்பட்ட வாக்குகள் இந்த முறையும் கிடைக்கும். இந்த முறை மேயர் பதவியை தந்து சாய்ந்தமருது மண்ணை நாம் அலங்கரிப்போம். சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்படும் வரை மேயர் பதவி தொடரும். அதை யாராலும் தடுக்க முடியாது. கல்முனையிலுள்ள யாரும் அதை எதிர்த்து பேச மாட்டார்கள். அதுவரை இந்த மாநகரம் கல்முனை- சாய்ந்தமருது மாநகரம் என பெயர் மாற்றப்படும்” என்றார்.

Pix by SLMC Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*