கல்முனை நகரமயமாக்கல் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க மாநகர ஆட்சியை ஐ.தே.க.விடம் ஒப்படையுங்கள்..!

(எம்.எஸ்.எம்.சாஹிர், பி.எம்.எம்.ஏ.காதர்)

“கல்முனை மாநகராட்சியின் கீழுள்ள பிரதேசங்கள் அனைத்தையும் புதிய நகரமயமாக்கல் திட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இரண்டாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் இன, மத பேதங்களுக்கப்பால் துரித அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு கல்முனை மாநகர சபையின் ஆட்சியை ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படையுங்கள்” என அக்கட்சியின் கல்முனை தொகுதி பிரசார இணைப்பு செயலாளரும் முஸ்லிம் சமய, கலாசார, தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளரும் நியமனப்பட்டியல் வேட்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாண்டிருப்பு தமிழ் கிராமத்தில் ஐ.தே.கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தை முன்மொழிந்திருந்தார். துரதிருஷ்டவசமாக வடக்கு தமிழர்கள் வாக்களிக்காமல் தடுக்கப்பட்டதனால் அவரது வெற்றி வாய்ப்பு சுமார் ஒரு இலட்சம் வாக்குகளினால் தவறிப்போனதை எல்லோரும் அறிவோம்.

அதுபோன்று கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது எமது ஐ.தே.க.முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கல்முனை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்க கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உறுதிமொழியை வழங்கியிருந்தார்.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவு திட்டத்தில் பிரதமர் ரணில் இத்திட்டத்திற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை நகர திட்டமிடல் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார். தற்போது அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்தவொரு சமூகத்திற்கும் அநீதியிழைக்கப்படாமல் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை பிரதமர் அலுவலகம் கண்காணித்து வருகின்றது.

இந்த அபிவிருத்தி திட்டங்கள் யாவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டுமானால் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆணி வேரான ஐக்கிய தேசியக் கட்சியிடம் கல்முனை மாநகர சபையின் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். புதிய நகரமயமாக்கல் திட்டத்தின் பிரதான இயந்திரமாக மாநகர சபையே இருந்து வருகின்றது. அதனால் அந்த நிறுவனம் அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கல்முனை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமானதோ அல்லது தமிழர்களுக்கு மட்டுமானதோ இல்லை. இது மூவின மக்களும் வாழ்கின்ற பூமியாகும். தூர்ந்து போய்க்கிடக்கின்ற இந்த மாநகரத்தை கட்டியெழுப்புகின்ற பொறுப்பு நம் எல்லோரையும் சார்ந்தது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு இனவாத பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இது விடயத்தில் தமிழ், முஸ்லிம்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இனவாத சாயமில்லாமல் எல்லோரும் ஒற்றுமையுடன் சங்கமிக்கின்ற ஒரு முகாம் ஐக்கிய தேசிய காட்சியாகும்.

தேர்தல் காலங்களில் பிரிந்து நின்றாலும் தேர்தலுக்குப் பின்னர் தெரிவு செய்யப்படும் அனைத்து உறுப்பினர்களும் இன, மத, கட்சி பேதமின்றி ஒற்றுமையாக செயல்பட்டு, கல்முனையை நவீன நகரமாக மாற்ற வேண்டியுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*