சாய்ந்தமருது மு.கா. எழுச்சி மாநாட்டு கலவரம்; 21 பேரில் 12 சிறுவர்கள் பிணையில் விடுதலை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி மாநாட்டின்போது குழப்பம் விளைவிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 பேரில் 12 சிறுவர்கள் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “மாண்புறும் சாய்ந்தமருது” எழுச்சி மாநாடு கடந்த சனிக்கிழமை (03) சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் சாய்ந்தமருதில் ஹர்த்தால், கடையடைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை குறித்த மாநாடு கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உரையுடன் நிறைவடைந்த நிலையில் அங்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களை மேற்கொண்ட பொலிஸார் அவ்விடத்தில் 21 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர். இவர்கள் மறுநாள் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரப்பன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதன் பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் 18 வயதுக்குட்பட்ட 12 சிறுவர்கள் அடங்குவதாகவும் அவர்கள் இச்சம்பவத்தில் எவ்வித தொடர்புமில்லாதவர்கள் எனவும் அவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் எனவும் தெரிவித்து அவர்களை விடுவிக்குமாறு கோரி விசேட பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.றிஸ்வான், குறித்த 12 சிறுவர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம், இரண்டு சரீரப் பிணைகளுடன் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி:

மு.கா.எழுச்சி மாநாட்டு எதிரொலி; சிறுவர்கள் உட்பட 21 பேர் கைது; 12ஆம் திகதி வரை விளக்கமறியல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*