மெட்ரோ மிரர் செய்தியால் அமைச்சர் அதிரடி நடவடிக்கை; காரைதீவு வீதி நிர்மாண முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவு!

காரைதீவு பிரதேசத்தில் ஜெயகா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அமைச்சின் செயலாளரை பணித்துள்ளார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஜெய்கா திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் கொங்கிறீட் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் பிரகாரம் காரைதீவு பிரதேசத்திலும் புனரமைப்பு வேலைகள் இடம்பெறுகின்றன. ஆனால் முறையற்ற விதத்தில் பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுவதாகவும் இது விடயத்தில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் நமது மெட்ரோ மிரர் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தது.

இதனை அடுத்தே தனது அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாருக்கு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதனை விசாரணை செய்ய அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இப்பாதை புனரைமப்பு பணிகளை காலம் தாழ்த்தாது உடன் மேற்கொள்ளும் வகையில் விசாரணைகளை விரைவுபடுத்தி உரிய முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பாதை அமைப்புக்கான உரிய நியமங்களை கடைப்பிடிக்கும் வகையில் எவ்வித பக்கச் சார்புமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாகாண அமைச்சர்
உதுமாலெப்பை குறித்த உத்தரவில் கண்டிப்பான பணிப்புரையை விடுத்துள்ளார்.

குறிப்பு: குறித்த செய்திகளை புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் மெட்ரோ மிரருக்கு அனுப்பிய நமது சிறப்பு செய்தியாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களுக்கே இது சமர்ப்பணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*