கருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது

 கருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது

திகாமடுல்ல மாவட்டம்;
04 முஸ்லிம், 03 சிங்களவர் தெரிவு; தமிழ் பிரதிநிதித்துவம் இழப்பு;
ம.கா, தே.கா. முதல் தடவையாக வெற்றி..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 07 ஆசனங்களைக் கொண்ட திகாமடுல்ல மாவட்டத்தில் 04 முஸ்லிம்களும் 03 சிங்களவர்களும் வெற்றியீட்டியுள்ள அதேவேளை இம்மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 126012 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இக்கட்சியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.வீரசிங்க மற்றும் டொக்டர் திலக் ராஜபக்ச ஆகியோர் முறையே கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று
வெற்றியீட்டியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 102274 வாக்குளைப் பெற்று இரண்டு ஆசனைங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் முறையே கூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்குகளையும் தேசிய காங்கிரஸ் 38911 வாக்குகளையும் பெற்று தலா ஒரு ஆசனத்தை தமதாக்கிக் கொண்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.முஷர்ரப், தேசிய காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் வெற்றியீட்டியுள்ளனர்.

அதேவேளை கருணா அம்மான் தலைமையிலான தமிழர் மகா சபை 29379 வாக்குகளையும் வாக்குகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 25255 பெற்றுள்ள போதிலும் இவ்விரு கட்சிகளுக்கும் ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதன் காரணமாக திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தொடர்ச்சியாக இருந்து வந்த தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் தானும் தோற்று தமிழ் கூட்டமைப்பையும் தோற்கடித்த பெருமையை முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் பெற்றிருக்கிறார். கருணாவின் இந்த வரவினாலேயே அதாவுல்லாவுக்கு வெற்றிவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முதன் முறையாக ACMC வெற்றி

அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாக திகாமடுல்ல மாவட்டத்தில் ஓர் ஆசனத்தை வென்றுள்ளது. கடந்த 2015 ஆண்டு பொதுத் தேர்தலில் 33143 வாக்குகளை பெற்றுக் கொண்டபோதிலும் இக்கட்சிக்கு ஆசனம் கிடைத்திருக்கவில்லை.

அவ்வாறே இம்முறை தேசிய காங்கிரஸ் முதல் தடவையாக தனது குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு ஓர் ஆசனத்தை கைப்பற்றியிருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் இக்கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

பிரதிநிதித்துவத்தை இழந்த சம்மாந்துறை

கடந்த 2015′ பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு இரு ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இக்கட்சி இம்முறை ஓர் ஆசனத்தை இழந்திருக்கிறது.

தொகுதி ரீதியாக அம்பாறைத் தொகுதிக்கு 03 பிரதிநிதித்துவங்களும் பொத்துவில் தொகுதிக்கு 03 பிரதிநிதித்துவங்களும் கல்முனைத் தொகுதிக்கு 01 பிரதிநிதித்துவமும் கிடைத்துள்ள அதேவேளை சம்மாந்துறைத் தொகுதி இம்முறை பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது.

தோல்வியடைந்த முன்னாள் எம்.பி.க்கள்

கடந்த 2015′ பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் தயா கமகே வெற்றியீட்டியிருந்தார். ஆனால் அவர் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள அதேவேளை அவரது பாரியாரான முன்னாள் பிரதி அமைச்சர் அனோமா கமகே திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

அவ்வாறே கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்திருந்த கவீந்திரன் கோடீஸ்வரன் (தமிழ் கூட்டமைப்பு), எம்.ஐ.எம்.மன்சூர் (முஸ்லிம் காங்கிரஸ்), ஏ.எல்.எம்.நஸீர் (முஸ்லிம் காங்கிரஸ்) ஆகியோரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்து விலகி தேசிய காங்கிரசில் இணைந்து போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலும் தோல்வியடைந்துள்ளனர்.

தோல்வியடைந்த முக்கியஸ்தர்கள்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத் (மக்கள் காங்கிரஸ்), ஏ.எல்.தவம் (முஸ்லிம் காங்கிரஸ்), எம்.ஐ.எம்.மாஹிர் (மக்கள் காங்கிரஸ்), நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.தாஹிர் அஷ்ரப் (மக்கள் காங்கிரஸ், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாசித் (முஸ்லிம் காங்கிரஸ்) ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

இவர்கள் தவிர அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபக செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பில் தேசிய காங்கிரசில் போட்டியிட்ட சட்டம், ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வர் ரிஸ்லி முஸ்தபா உள்ளிட்டோரும் தோல்வியடைந்துள்ளனர்.

0 Reviews

Related post