கல்முனையை கலவர பூமியாக மாற்றும் செயற்பாடுகளில் கருணா ஈடுபடுகிறார்..!

 கல்முனையை கலவர பூமியாக மாற்றும் செயற்பாடுகளில் கருணா ஈடுபடுகிறார்..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றச்சாட்டு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனையை கலவர பூமியாக மாற்றும் செயற்பாடுகளில் கருணா ஈடுபட்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் மருதமுனை கடற்கரை வெளியரங்கில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்;

“கருணா அம்மான் எமது கல்முனை மண்ணுக்கு வந்து நின்று கொண்டு முஸ்லிம்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றார். முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் எனவும் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பிடும் அவர் கல்முனை மண்ணில் முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் கிடையாது எனவும் சூளுரைக்கின்றார்.

கடைசியில் இப்போது முஸ்லிம்கள் ஜப்பான் குஞ்சு போன்று குழந்தைகள் பெத்துத் தள்ளுவதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழ் மக்களை மாத்திரமல்ல, பௌத்த பிக்குகளையும் முஸ்லிம்களுக்கெதிராக தூண்டி விடுவதற்கு கருணா முயற்சிக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது. அவ்வாறென்றால் இந்நாட்டு முஸ்லிம்கள் பிள்ளை பெறுவதற்கும் சுதந்திரம் இல்லையா? என்று கேட்க விரும்புகின்றேன்.

கல்முனையில் இயங்கும் தமிழ் இளைஞர் சேனாவின் அனுசரணையில் இங்கு வந்து தேர்தலில் குதித்துள்ள கருணா, தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற இந்த கல்முனை மண்ணை கலவர பூமியாக மாற்றுவதற்கே முனைப்புக் காட்டி வருகின்றார்.

கல்முனை முஸ்லிம்களின் பொருளாதாரம், கல்வி, சமூகக் கட்டமைப்பு என்று எல்லாவற்றையும் சிதைத்து, சீரழிக்கும் திட்டத்துனேயே அவர் இங்கு களமிறங்கியுள்ளார்” என்றும் ஹரீஸ் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், முன்னாள் எம்.பி.க்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் அப்துல் வாசித் ஆகியோருடன் கட்சியின் தவிசாளர் முழக்கம் அப்துல் மஜீத், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் அமீர், எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.எம்.ஹாரிஸ் (நவாஸ்), மு.கா. பிரதிப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

0 Reviews

Related post