கல்முனை மாநகரம் பலவீனப்படாத வகையில் சாய்ந்தமருது மக்களினதும் தமிழர்களினதும் அபிலாஷைகளை ராஜபக்ஸ அரசினால் மாத்திரமே நிறைவேற்ற முடியும்..!

 கல்முனை மாநகரம் பலவீனப்படாத வகையில்  சாய்ந்தமருது மக்களினதும் தமிழர்களினதும் அபிலாஷைகளை ராஜபக்ஸ அரசினால் மாத்திரமே நிறைவேற்ற முடியும்..!

-வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா நம்பிக்கை

(செயிட் ஆஷிப்)

“சாய்ந்தமருது மக்களினதும் கல்முனைத் தமிழர்களினதும் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுகின்ற அதேவேளை கல்முனை மாநகர சபையும் பலவீனப்படாத வகையில் நான்கு உள்ளூராட்சி சபைகள் ஒரே நேரத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதனை எமது ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மாத்திரமே வெற்றிகரமாக நிறைவேற்றித்தர முடியும்” என்று பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் றிஸ்லி மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எமது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு நகர சபை உருவாக்கப்பட வேண்டும், அதேவேளை கல்முனை மாநகர சபையும் பலவீனமடைந்து விடக்கூடாது. கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு தெளிவான எல்லையிடப்பட்டு, அது தரமுயர்த்தப்பட்டு, அதனை மையப்படுத்தி தமிழர்களுக்கு ஒரு நகர சபை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மருதமுனைக்கும் ஒரு நகர சபை அமைக்கப்பட வேண்டும். இதுவே கல்முனை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையும்.

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையானது எமது மக்களின் அடிப்படை தேவையாகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் கல்முனை மக்களும் எம்மைப் பார்த்து எந்தவித சந்தேகமும் கொள்ளக் கூடாது, அவர்களது மனம் புண்படக் கூடாது. அதனால்தான் எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஒரே நாளில் நான்கு சபைகளுக்குமான வர்த்தமானி அறிவித்தலுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுகின்ற திறனும் தைரியமும் எமது பொதுஜன பெரமுன அரசுக்கே உள்ளது என்கிற யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எனது தந்தை மயோன் முஸ்தபாவின் அழைப்பிலே தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச சாய்ந்தமருதுக்கு வருகைதந்து, நகர சபை தருவதாக வாக்குறுதியளித்தார். அவ்வாறே பஸீல் ராஜபக்சவையும் அழைத்து வந்து, வாக்குறுதியளிக்கச் செய்தோம். என்றாலும் அவர்களுக்கு நாம் பெரும்பான்மை வாக்குகளை சாய்ந்தமருதில் இருந்தோ அல்லது கல்முனை தொகுதியில் இருந்தோ வழங்கவில்லை.

இருந்தபோதும் இதனை வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்கு பொதுஜன பெரமுன அரசு உரிய நடவடிக்கை எடுத்து வந்த சூழ்நிலையில், அதாஉல்லாஹ் தரப்பினர் தமது சுயநல அரசியலை இலக்காக கொண்டு, அவசர அவசரமாக பிழையான வர்த்தமானி ஒன்றை, உரிய அமைச்சரின் அனுமதியில்லாமல் வெளியிட்டு, மாயாஜாலம் காட்டி, குழப்பியடித்து விட்டனர். அமைச்சரவையில் இந்த விடயம் விவாதத்துக்கு வந்தபோது இதன் திருகுதாளம் வெளியானதை யாவரும் அறிவீர்கள். இறுதியில் இந்த அவசர நிலை எதற்கு என ஆராய்ந்தபோது சிலரின் அரசியல் காரணிகளும் வாக்குகளும் பின்னணியாய் இருந்ததை இப்போது அறிகிறோம்.

ஆகையினால் இந்த சந்தர்ப்பத்தில் உண்மை நிலைகளை புரிந்து கொண்டு யாருக்கும் பாதிப்பில்லாத வர்த்தமானி அறிவித்தலினை ஒரே நாளில் வெளிவரச் சரிவதே எனது இலக்கு. அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன். அத்துடன் தமிழ் பிரதேச செயலகத்தின் எல்லைகளை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அதேபோன்று கல்முனை மக்களின் ஒரு துண்டு நிலமும் யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் உரிய முறைப்படி அதனை சரிவர நிறைவேற்றுவோம். அதற்குரிய அதிகாரத்தினை எமக்கு தாருங்கள்.

நாம் வெறுமனே வாய்ப்பேச்சுகளால் எமக்கான அபிவிருத்தியை பேசுபவர்கள் அல்ல, நடைமுறையில் செய்து காட்டுபவர்கள். கடந்த காலத்தில் எனது தந்தை பல சேவைகளை உங்களுக்கு காட்டித்தந்துள்ளார். அதில் சில விடயங்கள் முற்றுப் பெறவில்லை அவற்றை நீங்கள் உருவாக்கிய எவரும் கடந்த காலத்தில் தொடரவும் இல்லை, வெறுமனே தங்களது அமானிதத்தை காலம் கடத்தி விட்டனர்.

இதனால் எந்த ஒரு ஊரும் அபிவிருத்தி பெறவில்லை. எமது தமிழ் சகோதரர்களை எப்போதும் வஞ்சித்து கொண்டிருக்கின்றனர். வெறும் இனவாத பேச்சுக்களை மக்கள் மத்தியில் விதைத்து, எதிரிகளாகவே அவர்களை பார்க்கின்றனர். அவர்களை எதிரியாக்கிக் கொண்டு நாம் எந்த அபிவிருத்தியையும் பெற முடியாது. அது நியாயமும் அல்ல. ஒற்றுமையாக பயணிப்பதன் மூலமே நாம் முழுமையான அபிவிருத்தியை காணமுடியும். அவர்களுக்கான பங்கையும் சரியாக வழங்குவோம். அதன் மூலமே நாம் ஒரு நீதி நியாயமான சமூகமாக வாழ்ந்து காட்ட முடியும். அதன் மூலமே எமது முழுமையான இஸ்லாமும் அவர்கள் மத்தியில் பரவும் வாய்ப்பு ஏற்படும். வெறுப்பு பேச்சுக்களால் எம்மை விட்டும் இஸ்லாத்தை விட்டும் அவர்கள் எப்போதும் தூரமாகியே போவார்கள், அதனால் எமது மார்க்க கடமையை செய்ய தவறியவர்களாக நாம் இறைவனால் தண்டிக்கப்படுவோம்.

ஒருவரது உரிமையில் கை வைக்க யாருக்கும் உரித்து இல்லை. சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கொடுத்து, கல்முனை நகரை பொலிவுள்ளதாக்கி, தமிழ் மக்களை எமது சகோதர உறவுகளாக மாற்றுவோம் வாருங்கள்” என்றார்.

0 Reviews

Related post