கல்முனை மாநகர சபை ஊழியர் நலன்புரி சங்க நிதி, ஊழியர்களின் நலனோம்பு விடயங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது

 கல்முனை மாநகர சபை ஊழியர் நலன்புரி சங்க நிதி, ஊழியர்களின் நலனோம்பு விடயங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை ஊழியர் நலன்புரி சங்கத்திற்குரிய நிதி, ஊழியர்களின் நலனோம்பு விடயங்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை மாநகர சபை ஊழியர் நலன்புரி சங்கத்திற்கு ஊழியர்களினால் செலுத்தப்படுகின்ற மாதாந்த சந்தாப் பணம், சில உத்தியோகத்தர்களினால் மோசடி செய்யப்படுவதாக அநாமோதய முகநூல்களில் எழுதப்பட்டிருக்கும் விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து நான் அது குறித்து ஆராய்ந்தபோது அதில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்பதை என்னால் உறுதிபடுத்த முடிந்தது.

ஊழியர் நலன்புரி சங்கம் என்பது கல்முனை மாநகர சபையில் மாத்திரமல்லாமல் அனைத்து அரச அலுவலகங்களிலும் இயங்கி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

இது கல்முனை மாநகர சபையில் மாத்திரம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அனைத்து அரச அலுவலகங்களிலும் இயங்கி வருகின்ற ஊழியர் நலன்புரி சங்கத்தின் நிதிக்கு அந்தந்த அலுவலக ஊழியர்கள் மாதாந்த சந்தா செலுத்துவது போன்றே மாநகர சபை ஊழியர்களும் அதனை செலுத்தி வருகின்றனர். இது குறித்த அமைப்புக்குரிய அனைத்து ஊழியர்களினதும் பங்களிப்பு நிதியாகும்.

இது விடயத்தில் எந்த ஊழியர் மீதும் எவ்வித நிர்ப்பந்தமும் கிடையாது. ஊழியர்களின் நலனோம்பு விடயங்களுக்கே இப்பணம் செலவிடப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களின் மரணப் பணிக்கொடை, திருமண மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான நிதியுதவி, பிரியாவிடை அன்பளிப்பு போன்ற விடயங்களுக்கு இந்நிதி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஊழியர்கள் அனைவரும் பயன்பெறுவதற்கான வாய்ப்பிருப்பதைக் காண முடிகிறது.

இந்த ஊழியர் நலன்புரி அமைப்புக்கு பதவி வழியில் ஆணையாளர், கணக்காளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அடங்கிய நிர்வாகத்தினர் பொறுப்பாக இருந்து வழிநடத்துகின்றனர். இதற்கென பிரத்தியேக வங்கிக்கணக்கு பேணப்பட்டு வருகின்றது. இதில் மோசடி, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை.

மேலும், இது கல்முனை மாநகராட்சி நிர்வாக விடயதானங்களுக்கு புறம்பான ஒரு அமைப்பாக இருப்பதால், இது மாநகர முதல்வருக்கு பொறுப்புடமையான ஒரு விடயமல்லல்ல என்பதனால் நான் இந்த ஊழியர் நலன்புரி சங்க நிர்வாகத்திலோ செயற்பாடுகளிலோ தலையீடு செய்வதில்லை என்பதையும் அறியத்தருகின்றேன்.

0 Reviews

Related post