கிழக்கில் 5000 ஆசிரியர்களுக்கு நேரசூசி இல்லையாம்..! விசாரணைக்குழு நியமித்து ஆராய வேண்டுமென்கிறது கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம்..!

 கிழக்கில் 5000 ஆசிரியர்களுக்கு நேரசூசி இல்லையாம்..! விசாரணைக்குழு நியமித்து ஆராய வேண்டுமென்கிறது கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் சுமார் 26,000 ஆசிரியர்களில் 5000 பேர் நேரசூசியின்றி கடமையாற்றுகிறார்கள் எனும் அதிர்ச்சி தரும் தகவலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எல்.சி.பெர்ணான்டோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 5000 ஆசிரியர்களுக்கு நேரசூசி இல்லையெனில், இதற்கான காரணம் யார் என்பதனை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தீவிரமாக ஆராய வேண்டும். இதற்கென தனியான ஒரு விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இவ்விடயம் தொடர்பாக சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 650 அதிபர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறு பற்றாக்குறை நிலவுகையில், இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த பலர் வலயக் கல்வி அலுவலகங்களில் அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் இணைப்புச் செய்யப்பட்டிருப்பது ஏன் என்று கேட்கிறோம்.

அத்துடன் 140 கல்வி நிருவாக சேவை அதிகாரிகளூக்கான வெற்றிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் வலயக்கல்வி அலுவலகங்களில் இந்த அதிகாரிகளுக்கு உரிய கடமைப் பொறுப்புக்கள் வழங்கப்படாமல் தற்காலிக உத்தியோகத்தர்களைக் கொண்டு அவை நிறைவேற்றப்படுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு மத்தியில் கடமையாற்றுகின்றனர்.

இவை பற்றி கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு எம்மால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் மேலும் தெரிவித்தார்.

0 Reviews

Related post