சாய்ந்தமருதில் கொரோனா தொற்றாளர் 13 ஆக அதிகரிப்பு..! துறைமுக ஊழியர் ஒருவருக்கும் தொற்று..! 100 பேருக்கு அவசர அன்டிஜென் பரிசோதனை..!

 சாய்ந்தமருதில் கொரோனா தொற்றாளர் 13 ஆக அதிகரிப்பு..! துறைமுக ஊழியர் ஒருவருக்கும் தொற்று..! 100 பேருக்கு அவசர அன்டிஜென் பரிசோதனை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை மூலம் சாய்ந்தமருது பொலிவேரியன் புதிய நகரைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட நால்வரும் கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருமே இவ்வாறு புதிதாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதன்படி சாய்ந்தமருதில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களுள் முதலாவது அலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒரேயொரு கொரோனா தொற்றாளர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இரண்டாவது அலையில் தொற்றுக்குள்ளானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய மற்றும் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் புதிய நகரில் 100 பேருக்கு ரெபிட் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் 99 பேருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் சந்தேகத்திற்குரிய ஒருவருக்கு மாத்திரம் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்த்தில் இருந்து முதலாவது கொரோனா தொற்றாளர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடமையாற்றும் அரச ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Related post