சாய்ந்தமருது திண்மக்கழிவகற்றல் சேவைக்கு மேலும் ஒரு வாகனம் கையளிப்பு..!

 சாய்ந்தமருது திண்மக்கழிவகற்றல் சேவைக்கு மேலும் ஒரு வாகனம் கையளிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, அங்கு சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மேலதிகமாக குபோட்டா ட்ரெக்டர் ஒன்று அவ்வலயத்திற்கென வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (30) மாநகர சபை வளாகத்தில் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், சாய்ந்தமருது வலய சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே.காலிதீனிடம் ட்ரெக்டர் சாவியை கையளித்தார்.

இந்நிகழ்வில் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

சாய்ந்தமருது வலயத்தில் ஏற்கனவே திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 01 லொறி, 02 ட்ரெக்டர் உட்பட 04 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகர சபையில் பாவிக்கப்பட்டு, பழுதடைந்த நிலையில் பல வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை, மாநகர சபை வாகன திருத்துநர்களின் பங்களிப்புடன் குறைந்த செலவில் திருத்தியமைத்து, சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற முதல்வரின் எண்ணக்கருவுக்கமைவாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட குபோட்டா ட்ரெக்டரே இன்று மேலதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது.

மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இவ்வாறு இன்னும் சில வாகனங்கள் திருத்தியமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளிலும் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Related post