சாய்ந்தமருது முன்பள்ளிகளில் திடீர் சோதனை; சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்திக்க பணிப்பு..!

 சாய்ந்தமருது முன்பள்ளிகளில் திடீர் சோதனை; சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்திக்க பணிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கி வருகின்ற முன்பள்ளிப் பாடசாலைகள் சிலவற்றில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கல்முனை மாநகர சபை பணித்துள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையின்போது குறித்த முன்பள்ளிப் பாடசாலைகளின் சுற்றுச்சூழல், வகுப்பறை இட வசதி, காற்றோட்டம், கொரோனா தொற்று பாதுகாப்பு ஏற்பாடு, மலசல கூட வசதி மற்றும் சுகாதார நடைமுறைகளில் நிலவும் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் தலைமையில் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர், வருமானப் பரிசோதகர்களான எம்.சலீம், என்.புவனேந்திரன் உள்ளிட்டோர் இப்பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பிள்ளைகளுக்கு தீங்கு ஏற்படும் வகையில் குறித்த முன்பள்ளிகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் யாவும் ஒருவார காலத்திற்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என அவற்றின் பொறுப்பாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை மூடப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் தெரிவித்தார்.

அதேவேளை கல்முனை மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்பள்ளிப் பணியகம் என்பவற்றின் அனுமதி பெறப்படாமல் சில முன்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றமை இதன்போது கண்டறியப்பட்டதாகவும் அவற்றை உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 Reviews

Related post