ஜனாஸா எரிப்புக்கெதிராக கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்..!

 ஜனாஸா எரிப்புக்கெதிராக கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிக்காமல், நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்தைக் கோரும் பிரேரணை கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு புதன்கிழமை (25) பிற்பகல், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது, மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தரினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பி.எம்.ஷிபான் மற்றும் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் ஆகியோர் ஆமோதித்ததுடன் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கான ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதன்போது கொவிட்-19 தொற்று நோயினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது குறித்து கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டதுடன் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை மீறி, இன்னும் இன்னும் ஜனாஸாக்களை எரித்து முஸ்லிம்களின் மனதைப்புண்படுத்தாமல், நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட இப்பிரேரணையை ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளருக்கு மேயர் ஏ.எம்.றகீப் அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

metromirrorweb@gmail.com

0 Reviews

Related post