ஜனாஸா எரிப்புக்கெதிரான உச்ச நீதிமன்ற வழக்கு; விசாரணைகள் ஆரம்பம்..!

 ஜனாஸா எரிப்புக்கெதிரான உச்ச நீதிமன்ற வழக்கு; விசாரணைகள் ஆரம்பம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று முற்பகல் ஆரம்பமாகியுள்ளன. இவ்விசாரணைகள் இன்று மாலை வரை இடம்பெற்று, தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முருது பெர்னாண்டோ, பத்மன் சுரஷேன ஆகியோர் முன்னிலையில் இம்மனுக்கள் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர், பைஸர் முஸ்தபா மற்றும் விரான் கொரயா உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா முற்பகல் வேளையில் ஆரம்ப வாதங்களை முன்வைத்து, சமர்ப்பணம் செய்துள்ளார். பிற்பகல் அமர்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர் ஆகியோர் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர். வாதப்பிரதிவாதங்களைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் சமர்ப்பணம் இடம்பெறும்.

இம்மனுக்களை ஆட்சேபித்து கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயரத்ன ஆஜராகியுள்ளார். பிரதிவாதியான சுகாதார அமைச்சர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரில்புள்ளே ஆஜராகியிருக்கிறார்.

0 Reviews

Related post