துண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..!

 துண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மருதமுனையில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழு அமைப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்கள் மறுப்பறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

திகாமடுல்ல மாவட்டத்தில் டெலிபோன் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற
வேட்பாளர்களில் 09ஆம் இலக்கத்திற்கு மாத்திரம் வாக்களிக்குமாறு தான் கோருவதாக எனது பெயரில் அச்சிடப்பட்டு, மருதமுனையில் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் என்னால் வெளியிடப்படவில்லை என்பதையும் அத்துண்டுப் பிரசுரத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதையும் எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு அறியத்தருகின்றேன்.

ஆகவே, நமது கல்முனைத் தொகுதி வேட்பாளரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் 09ஆம் இலக்கத்திற்கும் மீதமுள்ள இரண்டு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்பும் ஏனைய இரண்டு முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் கட்டாயமாக அளிக்குமாறு எமது ஆதரவாளர்களை அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

தேர்தலுக்கான பிரசாரங்கள் அனைத்தும் முடிவுற்று, நாளை வாக்களிப்பு இடம்பெறவுள்ள இந்த இறுதித்தருவாயில், எமது கட்சிப் போராளிகளிடையே இருக்கின்ற கட்டுக்கோப்பை சீர்குலைத்து, அவர்களை குழப்பும் வகையில் சில தீய சக்திகள், இப்பிரசுரத்தை வெளியிட்டு, தமது அரசியல் வங்குரோத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இது எனக்கும் சகோதரர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் கட்சி ஆதரவாளர்களிடையே இருந்து வருகின்ற நற்பெயருக்கு களங்கத்தையும் வேட்பாளர்களிடையே வீண் சந்தேகங்களையும் பிரதேசங்களிடையே முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதற்குமான திட்டமிட்ட சூழ்ச்சியாகும். ஆனாலும் எமது போராளிகள் இது விடயத்தில் தெளிவாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, நாசகார சக்திகளின் இந்த சூழ்ச்சிகரமான செயலை நான் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறு எனது பெயரில் மோசடியாக துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ள அந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 Reviews

Related post