புதிய தேசிய பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் 02 வருடங்களுக்குள் இல்லை..!

 புதிய தேசிய பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் 02 வருடங்களுக்குள் இல்லை..!

(செயிட் ஆஷிப்)

புதிதாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் எவையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முன்னெடுக்கப்பட மாட்டாது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்தார்.

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;  

புதிய தேசிய பாடசாலைகள் உருவாக்கமானது கட்டடம்-1, கட்டம் -2 என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் விடுமுறையின் பின்னர் ஒரே தினத்தில் மாகாண கட்டமைப்பில் இருந்து தேசிய மட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு தரமுயர்த்தப்படும் பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் எவையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது. உத்தேச கல்வி  மறுசீரமைப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் வேளையிலேயே அவை முன்னெடுக்கப்படும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலை அந்ததந்த மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்கள் அங்கீகரிக்க வேண்டும் எனும் கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைவாக நேற்று திங்கட்கிழமை (22) கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர்களும் வலயக் கல்வி பணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கின்ற பட்டியலில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

உண்மையில் இவை தேசிய பாடசாலை என்பதை விட தேசிய அளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாடசாலைகள் என்பதே சரியானதாகும். ஏற்கனவே இருந்து வருகின்ற தேசிய பாடசாலைகள் என்ற அந்தஸ்த்தை இவை உடனடியாக பெறவும் மாட்டாது- எனவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

0 Reviews

Related post