முஸ்லிம் சுயநிர்ணயத்திற்கான போராட்டம்; சுமந்திரனின் வேண்டுகோளை விமர்சிக்கிறார் ஹரீஸ்; பெரும்பான்மையினருடன் மோதவிடும் சூழ்ச்சி எனவும் தெரிவிப்பு

 முஸ்லிம் சுயநிர்ணயத்திற்கான போராட்டம்; சுமந்திரனின் வேண்டுகோளை விமர்சிக்கிறார் ஹரீஸ்; பெரும்பான்மையினருடன் மோதவிடும் சூழ்ச்சி எனவும் தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

முஸ்லிம் சமூகம் தனது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் விமர்சித்துள்ளார்.

சுமந்திரன் போன்றவர்களின் இவ்வாறான கருத்துக்கள் முஸ்லிம்களை உசுப்பேற்றி, இன்னும் இன்னும் பெரும்பான்மை சமூகத்தினருடன் முஸ்லிம் சமூகத்தை முரண்பட வைத்து, மோதவிடுவதற்கான சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற ஊடகவியலாளர் றியாத் ஏ.மஜீத், தொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருதில் நேற்று ஞாற்றுக்கிழமை (27) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், இவ்விடயங்களை சுட்டிக்காட்டி மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“முஸ்லிம் சமூகத்தினை பெரும்பான்மை சமூகத்தினருடன் மோதவிடுகின்ற ஒரு சூழ்ச்சி அரங்கேறி வருகின்றது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்று பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்குபோல தேசிய அரசியலுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கிறது. இவ்வாறான ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குள் இருந்து கொண்டே எமது பிராந்திய அரசியல் உரிமைகளையும் அதிகாரத்தையும் காப்பாற்ற வேண்டியுள்ளது.

சம்மாந்துறையில் இடம்பெற்ற மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேசும்போது, முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதே சுமந்திரன் முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையாக இருக்கின்ற கல்முனை நகரினை முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு இரட்டை முகத்துடன் செயற்படுகின்ற அவர் ஏதோ முஸ்லிம்கள் விடயத்தில் பெரும் கரிசனை செலுத்துவது போன்று முஸ்லிம் சமூகத்தின் சுயநிர்ணயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

பெரும்பான்மையின மக்களோடு மோதவிடுவதற்கான ஒரு கருவியாக முஸ்லிம் சமூகத்தை மாட்டி விடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தமிழ் சமூகத்தினுடைய போராட்டத்திற்கு வலிமை சேர்க்கின்ற சக்தியாக பெரும் வல்லரசு நாடான இந்தியா இருக்கின்றது. ஆனால் ஜனாஸா எரிக்கப்பட்ட விடயத்தில் கூட முஸ்லிம் சமூகத்திற்காக வடக்கு கிழக்கில் உள்ள தலைமைகளோ, வல்லரசுகளோ குரல் கொடுக்க முன்வரவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான அரசியல் சூழ்நிலையில் முஸ்லீம் சமூகத்தை மிகவும் நுட்பமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்மன்றி சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வலியுறுத்தினார்.

0 Reviews

Related post