ரிஷாத் பதியுதீனின் கைது சட்ட ஆட்சியையும் நீதி முறைமையையும் குழிதோண்டிப்புதைக்கும் செயல்..! சமூகப் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்கிறார் மேயர் றகீப்..!

 ரிஷாத் பதியுதீனின் கைது சட்ட ஆட்சியையும் நீதி முறைமையையும் குழிதோண்டிப்புதைக்கும் செயல்..! சமூகப் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்கிறார் மேயர் றகீப்..!

அஸ்லம் எஸ்.மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நடுநிசியில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டிருப்பதானது, நாட்டில் சட்டத்தின் ஆட்சி முற்றாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

ஒரு சாதாரண பிரஜையை கைது செய்வதாயினும், அந்தக் கைதுக்கான காரணம் அவனுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட ஓர் அடிப்படை உரிமையாகும். இந்நிலையில் ரிஷாத் பதியுதீன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அவருக்கு சிறப்புரிமை உண்டு. மேலும், கைதுக்கு முன்னர் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் என்பதை ஒரு புறம் வைத்தாலும், ஒரு சாதாரண குடிமகனைக் கைது செய்கின்றபோது கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமை கூட கவனத்தில் கொள்ளப்பட வில்லை என்பது நாட்டின் சட்ட ஆட்சியையும் நீதி முறைமையையும் குழிதோண்டிப்புதைக்கின்ற கேவலமான செயலாகவே பார்க்கிறோம். இது எமது நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிப் பயணிப்பதையே வெளிப்படுத்துகின்றது.

கைது செய்யும்போது காரணம் கூறப்படாமல், பின்னர் காரணங்களைத் தேடிக்கண்டு பிடிப்பதும் விசாரணைகள் என்று காலத்தை இழுத்தடிப்பதும் அப்பட்டமான உரிமை மீறலாகும். ரிஷாத் பதியுதீனும் அவரது சகோதரரும் இதற்கு முன்னரும் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர், அதன் முடிவாக பயங்கரவாத செயற்பாடுகளுடன் இவர்களுக்கு எவ்வித தொடர்புமில்லை என்று நிருபிக்கப்பட்ட நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவ்வாறாயின் இவர்களை மீண்டும் கைது செய்வதற்கான தேவை என்ன?

ஆட்சியாளர்களின் முறையற்ற நிருவாகத்தினால் டொலரின் பெறுமதி நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் மக்களுக்கு நிவாரணமளிப்பதிலும் அரசாங்கம் தோல்வியைக் கண்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. போர்ட் சிற்றி விவகாரம் நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவை எல்லாற்றையும் விட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த முடியாமல் அரசாங்கம் திணறிப்போயுள்ளது. அத்தாக்குதலின் பின்னாலுள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கும் அரசாங்கம் தயாரில்லை.

இவை எல்லாவற்றையும் மூடி மறைப்பதற்காகவும் மக்களை திசை திருப்புவதற்காகவுமே சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் நாளாந்தம் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஹஜ்ஜுல் அக்பர், அசாத் சாலி போன்ற முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் அவரது சகோதரரும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, அடாத்தாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது அப்பட்டமான பழிவாங்கல் என்பது புரிகிறது.

இந்த வன்மமான செயற்பாடுகளின் மூலம் பேரினவாத சக்திகளுக்கு தீனி போடுவதற்கும் தனது ஆட்சி நிருவாகத்தின் தோல்வியை மூடி மறைப்பதற்கும் அரசாங்கம் முனைகின்றது. ஜனாஸா எரிப்பில் தொடங்கி முஸ்லிம் சமூகத்தை அடக்கியொடுக்கும் அத்தனை செயற்பாடுகளையும் அரங்கேற்றி தோல்வியடைந்துள்ள அரசாங்கம், முஸ்லிம் அறிஞர்களையும் சமூகத் தலைமைகளையும் வேட்டையாடும் செயற்பாட்டிலும் நிச்சயம் தோல்வியடையும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம்களின் பலமான ஆயுதம் துஆ எனும் பிரார்த்தனையேயன்றி சஹ்ரானின் குண்டுகளல்ல என்பதை ஆட்சியாளர்களும் பேரின சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஆயுத கலாசாரத்தில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. சிலரது அரசியல் தேவைக்காக ஏவி விடப்பட்டவனே சஹ்ரான் கும்பல் என்றும் அவனது தாக்குதல் மத, சமூக ரீதியானதல்ல என்றும் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் முன்னதாக சொன்னதே யதார்த்தமாகும். இக்கருத்தியலையும் புரட்டிப்போட வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு எழுந்திருப்பதையே ரிஷாத் பதியுதீனின் நடுநிசிக் கைது உணர்த்துகிறது.

இந்த அராஜகத்தை முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்கள் அனைவரினதும் விடுதலைக்காக இப்புனித றமழான் நோன்புடன் பிரார்த்திப்போம். மேலும், முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இத்தகைய அடக்குமுறைகள் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது. சமூகப் பாதுகாப்புக்காக எமது மக்கள் வீதியில் இறங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. முஸ்லிம்கள் தமது உணர்வலைகளை வெளிப்படுத்த வேண்டும். இந்த அநியாயங்களுக்கு எதிராக முஸ்லிம்கள் சமூக ரீதியாக ஒன்றிணைந்து கிளர்ந்தெழ வேண்டும். இது எமது சமூகக் கடமையாகும்.

இந்த சூழ்நிலையில் ரிஷாத் பதியுதீனைப் போன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என தன்னை மொட்டு செயற்பாட்டாளர் என்று கூறிக்கொள்ளும் ஓர் ஈனப்பிறவி முகநூலில் தெரிவித்திருப்பதானது அவனது வன்மமான குணத்தையே காட்டுகின்றது. சிலவேளை அவனது பிறப்பிலும் குறைபாடு இருக்கலாம். முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கின்ற எவனும் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மகிழ்ச்சியடைய மாட்டான்.

அவ்வாறே, இன்று முஸ்லிம் சமூகத்திற்காக எவ்வித அப்பழுக்குமின்றி பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஓங்கி ஒழித்துக் கொண்டிருக்கின்ற ஒரேயொரு அங்கீகாரம் பெற்ற தலைமையாக இருக்கின்ற ரவூப் ஹக்கீம் அவர்களும் கைது செய்யப்பட்டு, அந்த ஏக குரலும் நசுக்கப்பட்ட வேண்டும் என்று எலும்புத் துண்டுகளுக்காக மொட்டில் வாலாட்டும் அந்தப்பிறவி கோஷமெழுப்புகிறது என்றால் அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

கடன் ,ஏமாற்று மோசடி உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையிலுள்ள சமூக விரோதிகள் தம்மை மொட்டு செயற்பாட்டாளர்கள் எனத் தெரிவித்துக் கொண்டு அரசியலில் முகவரி தேடி அலைகின்றனர். இதை விட இவர்கள் தமது மணைவியரை ஏலமிட்டு பிழைத்துக் கொள்ளலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் அபிப்பிராயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மக்களிடம் செல்வாக்குமிக்க கட்சிகளாக இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சமூக ரீதியான கட்சிகளில் இணைவதற்கு எவ்வித தகுதியும் மதிப்புமற்ற இவர்கள், மொட்டு போன்ற முஸ்லிம் விரோத கட்சிகளிடம் தஞ்சமடைந்து, அவற்றின் செயற்பாட்டாளர்கள் என்று கூறிக்கொண்டு, வயிற்றுப்பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனாஸா எரிப்பைக் கூட ஆதரித்த இந்த ஈனப்பிறவிகள், முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இதர அநியாயங்களையும் ஆதரிப்பதில் ஆச்சாரியமில்லை- என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்லம் எஸ்.மௌலானா
முதல்வர் ஊடகப் பிரிவு

0 Reviews

Related post