விசாரணை முடிவுறும் வரை பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டாம்; SLEAS மாகாண செயலாளர் முக்தார் வேண்டுகோள்

 விசாரணை முடிவுறும் வரை பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டாம்; SLEAS மாகாண செயலாளர் முக்தார் வேண்டுகோள்

கிழக்கு மாகாண ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் பரீட்சையில் இடம்பெற்ற மோசடி, முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை அப்பரீட்சை முடிவுகளை வெளியிடக் கூடாதென மாகாண ஆளுனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை தொடர்பான கடிதத்தை இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மத் முக்தார், கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி நடாத்தப்பட்ட பரீட்சையின் ஒரு பகுதியான நுண்ணறிவு வினாத்தாள், பரீட்சைக்கு முன்னர் வெளியானது பற்றியும் கல்முனை பரீட்சை மண்டபத்தில் 08 பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை ஆரம்பமாகி, 12 நிமிடத்திற்கு பின்னர் போட்டோப் பிரதி வினாத்தாள் வினியோகிக்கப்பட்டது பற்றியும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறன.

ஆளுநராகிய தங்களது பணிப்புரைக்கமைவாக குற்றப்புலனாய்வு பொலிசார் முன்னெடுத்து வருகின்ற இவ்விசாரணைக்கு பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இப்பரீட்சையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான மோசடி, முறைகேடுகளினால் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்படும் பரீட்சைகளில் நம்பகத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

2017/2018 ஆண்டு காலப்பகுதியிலும் இதே போன்ற ஆங்கில ஆசிரியர் நியமனம் தொடர்பான நேர்முகப் பரீட்சையில் ஆட்சேர்ப்பு விதிமுறைகளுக்கு முரணான வகையில் நேர்முக பரீட்சை சபையின் தலைவர் நடந்து கொண்டமையால் சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவித்தபோதும் பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாடுகள் கவனத்தில் கொள்ளபடவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து, குறிப்பிட்ட நேர்முக பரீட்சைக்குரிய சபை தலைவரான கல்விப் பணிப்பாளர் ஆட்சேர்ப்பு விதிமுறைகளை மீறியதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவும் தங்களுக்கு முறையிட்டிருந்தோம் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

0 Reviews

Related post