20ஆவது திருத்தம் ஓர் அடிமைச்சாசனம்; இதனை ஆதரிப்பது வரலாற்றுத் துரோகம்; உச்சபீடத் தீர்மானத்தின் படியே மு.கா.வழக்குத் தாக்கல்; நிஸாம் காரியப்பர் விளக்கம்

 20ஆவது திருத்தம் ஓர் அடிமைச்சாசனம்; இதனை ஆதரிப்பது வரலாற்றுத் துரோகம்; உச்சபீடத் தீர்மானத்தின் படியே மு.கா.வழக்குத் தாக்கல்; நிஸாம் காரியப்பர் விளக்கம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கட்சியின் உச்சபீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாகவே அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இச்சட்டம் ஓர் அடிமைச்சாசனம் எனவும் இதனை ஆதரிப்பது வரலாற்றுத் துரோகமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

20ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளாத நிலையில், கட்சியினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு, அக்கட்சியின் சில பாராராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை (03) சக்தி தொலைக்காட்சியின் நியூஸ் லைன் நேரலை விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;

“எமது கட்சிக்குள் உள் ஜனநாயகம் அதிகபட்சம் காணப்படுகிறது. அதனால் அவரவர் கருத்தை சொல்வதற்கு எவருக்கும் நாம் தடை போடுவதில்லை. ஆனால் எமது கட்சி தீர்மானம் எதனையும் எடுக்காத நிலையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக கூறுவது முற்றிலும் பிழையான விடயமாகும்.

ஏனெனில் கடைசியாக இடம்பெற்ற கட்சியின் உச்சபீடக் கூட்டத்தில் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக முதற்கட்டமாக கட்சியினால் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பிரேரித்திருந்தார். அதனை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். அதனால்தான் கட்சியின் தலைவரே நேரடியாக நீதிமன்றம் சென்றிருந்தார். நானும் கட்சி சார்பிலான இரண்டு மனுக்கள் சார்பில் ஆஜராகியிருந்தேன்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல சிக்கல்கள் இருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்கள் நிறையவே பொறுப்புகளை சுமந்திருக்கின்றனர். குறிப்பாக பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்புகள் போன்ற விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிய தேவை அவர்களுக்கிருக்கிறது. இவை தொடர்பில் அவர்களுக்கு அழுத்தங்கள் இருக்கின்றன. ஜனநாயக அரசியல் என்பது வெறுமனே உரிமைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அதற்காக நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகமான ஒரு விடயத்திற்கு பொறுப்புள்ள ஒரு சமூக இயக்கம் என்ற ரீதியில் எமது கட்சி துணை போக முடியாது.

20 தொடர்பில் கடைசியாக எங்களால் எதிர்க்கத் தேவையில்லாத சட்ட மூலம்தான் பாராளுமன்றத்திற்கு வரும் என்கிற நம்பிக்கையையும் அவ்வாறாயின் அதனை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறுதான் வரும் என்றால் அதையும் நாம் எதிர்க்கவில்லை. யதார்த்தங்களை புறந்தள்ளி விட்டு நாம் எதையும் பேசவில்லை. ஆனால் அப்படி வரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.

நாங்கள் நீதிமன்றம் போயிருக்கின்ற விடயமானது அடிப்படை ஜனநாயக விழுமியங்களை பேணுகின்ற விதிகளை திருத்த வேண்டுமாயின் அதற்கு மக்கள் அபிப்பிராயம் பெறப்பட வேண்டும் என்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றுதான் கேட்டுள்ளோம். சிலவேளை நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பின்போது இந்த விடயங்களை உத்தரவாதப்படுத்திக் கொண்டு அது சமர்பிக்கப்படுமாயின், அதனை ஆதரிப்பது குறித்து அங்கிருக்கின்ற கட்சியின் தலைவரும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தீர்மானிக்கலாம்.

ஆனால் இந்த நாட்டில் எங்களுக்கு இருக்கின்ற ஒரு வாய்ப்பு நீதிமன்ற சுயாதீனம். அதையும் 20ஆவது திருத்தத்தின் ஊடாக இல்லாமல் செய்து விடுவார்களோ என்ற பயமும் எங்களுக்கு இருக்கின்றது. அடிப்படை உரிமை மீறல் சம்மந்தமாக இந்த சட்டமூலத்தில் மிகவும் பயங்கரமான வாசககங்கள் இருக்கின்றன. இந்த மசோதாவில் ஜனாதிபதிக்கு எதிராக எந்த வழக்கும் போட முடியாது என்று சொல்லப்படுவது மிகவும் பாரதூரமான விடயமாகும். ஆகையினால்தான் மிகவும் நிதானமாக யோசித்து, அதனை எதிர்க்கின்றோம்.

இந்த முடிவானது மக்களின் அபிலாஷைகளை புறந்தள்ளிவிட்டு எடுத்த தீர்மானமல்ல. இது மக்களின் பாதுகாப்பு கருதி மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டபோது நாங்கள் போஸ்டர் ஒட்டினோம். எங்களுக்கு கட்டடம் தேவையில்லை, எங்களுக்கு தொழில் தேவையில்லை. எங்களுக்கு எமது உரிமையும் பாதுகாப்பும்தான் வேண்டும் என்ற கோஷத்தையே அதில் எழுதியிருந்தோம். இக்கட்சி உருவாக்கப்பட்ட நோக்கம் இதுதான். அப்படி உருவாக்கப்பட்ட எமது கட்சியானது ஒரு சில வருடங்களுக்கு அபிவிருத்தி கிடைக்க மாட்டாது, தொழிவாய்ப்புகள் கிடைக்க மாட்டாது என்பதற்காக சோரம்போக முடியாது என்பதுதான் எமது நிலைப்பாடாகும்.

என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் என்பது ஓர் அடிமைச் சாசனமாகும். இதற்கு ஆதராவாக முஸ்லிம் காங்கிரஸ் கைதூக்கினால், எதிர்கால சந்ததியினர் எம்மை வரலாற்றுத் துரோகமிழைத்தவர்களாக குற்றம் சாட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும் இது தொடர்பான வாக்கெடுப்பின்போது எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு, தீர்க்கமான முடிவை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்திற்குப் பாதிப்பில்லாத அதேவேளை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுப்பதுதான் 20ஆவது திருத்த சட்டமூலம் என்று பிழையான வியாக்கியானம் சொல்லப்பட்டு வருகிறது. இதனால்தான் அதனை ஆதரிக்கலாம் என்ற சிலரது மாறுபட்ட நிலைப்பாட்டுக்குக் காரணமாகும். ஆகையினால் நாட்டுக்கும் மக்களுக்கும் இதில் இருக்கின்ற பாதகத் தன்மைகள் தொடர்பில் அவர்களுக்கு இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது” எனவும் மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.

0 Reviews

Related post