20 இற்கு மு.கா.வும் வழக்கு தாக்கல் செய்யும்; தலைவர் ஹக்கீம் அறிவிப்பு..!

 20 இற்கு மு.கா.வும் வழக்கு தாக்கல் செய்யும்; தலைவர் ஹக்கீம் அறிவிப்பு..!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தயாராகி வருகின்றது. திங்கள் அல்லது செவ்வாய்கிழமை நாங்கள் மனு தாக்கல் செய்வோம். அதேவேளை, இந்த புதிய சட்ட திருத்தம் குறித்து உயர் நீதிமன்றத்தின் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா? இல்லையா? என்ற தீர்மானத்தை இன்னும் நான்கு வாரங்களுக்கிடையில் மக்களுக்கு அறியக் கூடியதாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் சனிக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் அங்கு ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, இது சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எடுக்கின்ற நிலைப்பாடு குறித்தும் எங்களுக்குள் தீவிரமான கலந்துரையாடல்கள் நடைபெற இருக்கின்றன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி பாராளுமன்றத்தின் அதிகாரங்களை கொச்சைப்படுத்துகின்ற அடிப்படையில் அதிகூடிய அதிகாரங்களோடு இருக்க வேண்டும் என்பது புதிய சட்ட திருத்தங்களின் அடிப்படையில் தெளிவாகத் தெரிகின்றது.

எனவே, பாராளுமன்ற செயற்பாடுகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஆட்சியின் கீழ் பாராளுமன்றம் பலவீனமடைவது ஜனநாயகத்திற்கு பாதகமானதா? இல்லையா? என்பது குறித்தும் மக்கள் மத்தியில் மிகத் தெளிவாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்த சமநிலை பேணப்படாது விடுகின்ற சந்தர்ப்பத்தில் ஜனநாயகத்திற்கு தீங்கு விளையும் என்பதும் அனைவருக்கும் துலாம்பரமாக விளங்குகின்ற விடயமாகும்.

இந்தப் பின்னணியில், நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் அந்தப் பிரேரணைக்குரிய வாக்கெடுப்பு இடம்பெறும் போது கட்சி எவ்வாறான நிலைப்பாட்டில் எடுக்கலாமென்ற குறிப்பிட்ட கருத்தாடல்கள் கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

முன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு தங்களது கட்சி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ஏன் இந்த முறை எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள் என்று ஊடகவியலாளரொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வந்திருந்தாலும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவ்வதிகாரங்கள் அமையுமாயின், ஜனநாயகம் பாதிக்கப்படக் கூடும். அந்த சமநிலை பேணப்படாத விடத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்கின்ற அச்சப்பாடு இருக்கின்றது.

எனவே இது குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற போது அதற்கான காரணங்களை விரிவாக நானே முன்வந்து வாதிடுவதற்கு தயாராகி வருகின்றேன்.

நீங்கள் அரசாங்கத்துடன் இணைவீர்களா.? என்று ஊடகவியலாளரொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் பல கருத்துக்களை வெளியீட்டு வருகின்றன. இதுவரையில் அவ்வாறான எவ்விதமான முனைப்புக்களும் உத்தியோகபூர்வ ரீதியாக எங்களுக்கு மத்தியில் நடைபெறவில்லை.

இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், வாக்களிக்கின்ற விவகாரம் குறித்து கட்சி எவ்வகையான தீர்மானமொன்றுக்கும் வரவில்லை- என்றார்.

0 Reviews

Related post